மகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மண்ணின் பெரும்பகுதியாக படுவான்கரைப்பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேச மக்கள் வந்தாரை வரவேற்று வயிறாற உணவளித்து வழியனுப்புவதில் சிறப்புற்றவர்கள். இம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள், ஆழமான உண்மைகளை சமூகத்திற்கு சொல்பவை. கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை தலைமுறை வழியாக பேணிவளர்ப்பதில் அக்கறையானவர்கள். வீரத்திலும், விவேகத்திலும் வரலாறு படைத்தவர்கள், இவ்வாறான மக்கள் வாழ்கின்ற ஒருபரந்த விரிந்த, பகுதியான மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின், மகிழடித்தீவு கிராமத்தில் 1942ல் பிறந்து, எழுத்துத் துறையிலும், சமூகசேவையிலும் சிறந்து, மண்ணைவிட்டு 2007ல் அகன்றாலும், மண்ணின் மனிதர்களோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான், எல்லோராலும் மகிழை மகேசன் என அழைக்கப்படும் க.மகேஸ்வரலிங்கம்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் முதல் பட்டதாரியான இவர், சிறுதெய்வ வழிபாடு என்ற நூலை இம்மண்ணில் வாழ்பவர்களுக்காக வழங்கியிருக்கின்றார். மட்டக்களப்பு மக்களின் உணவுமுறை, வீடுகட்டும் முறை, திருமணச்சடங்கு போன்ற பல்வேறு விடயங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். தெம்மத்தான் கிணற்றடி அமுது என்ற தலைப்பில் எழுதப்பட்டக் கட்டுரை மண்முனை தென்மேற்கு மக்களின் விரும்தோம்பல் சிறப்பை எடுத்தியம்புவதாகவிருக்கின்றது. ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதிலும், ஆய்வுமாநாடுகளில் அதனை வாசிப்பதிலும் ஆர்வம் காட்டிய இவர், கவிதை, சிறுகதை, விமர்சனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தியிருக்கின்றார்.

மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும், முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இடைநிலைக்கல்வியையும் தொடர்ந்திருந்த மகேஸ்வரலிங்கம், உயர்கல்வியை கல்லடி சிவாநந்த பாடசாலையிலும் கற்று பேராதனைப்பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு, கலைமானி பட்டத்தினையும் நிறைவு செய்து, 1976ல் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான நியமனத்தினையும் பெற்றுக்கொண்டார். குறித்த பதவியிலே இருந்து கொண்டு, கலை, கலாசார, பண்பாடு சார் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கின்றார்.

சிறந்த பேச்சாளராக விளங்கியதோடு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட நிகழ்வின் நேரடி வர்ணனையாளராகவும் செயற்பட்டிருக்கின்றார். மாவட்டத்தின் கலாசார பேரவையின் உறுப்பினராகவும், பிரதேச கலாசார சபையின் செயலாளராகவும் செயற்பட்டதோடு, கிராம, பிரதேச அமைப்புக்களிலிருந்தும் பல்வேறு சேவைகளை சமூகத்திற்காக செய்திருக்கின்றார்.

இவ்வாறான ஆளுமை மரணித்தாலும் அவரின் நினைவுகள் இன்றும் நீங்கவில்லை. இவருடைய சிறுதெய்வ வழிபாடு நூல் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி, மட்டக்களப்பு மதநம்பிக்கை பற்றி அறிவதற்கான ஒரு முக்கியமான திறவுகோல் எனக்குறிப்பிட்டிருக்கின்றார். அதேபோன்று இவரது கட்டுரைகள் பற்றி பேராசிரியர் நி.பத்மநாதன் கூறுகின்ற போது, மத்திய கால மட்டக்களப்பு தேசத்து சமூக வலிமைகளை அறிந்து கொள்வதற்கு இவருடைய ஆக்கங்கள் பிரியோசனமானவை குறிப்பிட்டிருக்கின்றார்.

மகேஸ்வரலிங்கம் மரணித்து பன்னிரெண்டு வருடங்கள் கடந்தோடி முடிந்திருக்கின்ற நிலையிலும், அவரால் ஆய்வுசெய்யப்பட்ட மட்டக்களப்பு பிரதேச வீர சைவம் பற்றிய விடயங்கள் நூலாக வெளிவரவேண்டும் என அவரின் நினைவுமலரில் பலரும் குறிப்பிட்டிருந்தாலும் இன்றுவரை அவ்விடயம் நூலாக்கம் பெறாமை கவலையானதே.