தமிழ்க் கட்சிகள் வேற்றுமையை மறந்து பொது உடன்பாட்டுக்குகிழக்கு மாகாணத்திலாவது வரவேண்டும் – இரா.துரைரெட்ணம்

தமிழர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் எதிராக வலுவான இனவாத சக்திகள் உருவெடுப்பதால் தமிழர்களாகிய நாங்கள் எம்மைப் பலப்படுத்துவதற்கு நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக் கட்சிகள் வேற்றுமையை மறந்து பொது உடன்பாட்டுக்கு கிழக்கு மாகாணத்திலாவது வரவேண்டுமெனமுன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் குறிப்பாக, தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கின்ற தமிழர்களை வடக்கு வேறாக கிழக்கு வேறாகப் பிரித்து கிழக்கிலும் உள்ள ஒரு சில பலவீனமான பிரதிநிதிகளை தனிமைப்படுத்தி அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி இனவாதம் பேசி அதிலும் தமிழர்களைப் பிரித்து ஒரு பலவீனமான களத்தில் கிழக்குத் தமிழர்களைக் கொண்டு நிறுத்துவதற்கு இலங்கையின் இனவாத அரசின் பிரதிநிதிகள் கடந்த தேர்தலிலும், எதிர்வரும் தேர்தல்களிலும் சாதி,மத, இன முரண்பாட்டை தோற்றுவித்து தமிழ் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாரியதொரு சதி முயற்சியை மேற்கொள்வதாக சந்தேகிக்க வேண்டி உள்ளது. இந்தவிடயத்தை முறியடிப்பதற்கு தமிழர்களாகிய நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

இலங்கையின் இனவாதத்தின் உச்சக்கட்டமே நாட்டில் போராட்டம் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது. இதன் பலாபலனை நாடும், மக்களும் அனுபவித்தது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்ற தேர்தல்கள் ஊடாக இனவாதத்தைப் பேசி சமூகத்தை பல கூறுகளாகப் பிரித்து இதனூடாக தமிழர்களை பலவீனப்படுத்தலாம் என திட்டமிட்டுச் செயற்படுகின்ற இனவாத அரசின் கைக்கூலிகளுடன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிலர் இனவாதிகளோடு சேர்ந்து தமிழர்களை பலவீனமாக்கும் பாரிய சதிவலையில் ஈடுபடப்போகின்றனரா? தமிழ் இனத்தை பலவீனப்படுத்துவதற்காக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்ற குழுவினரால் முன்வைக்கப்பட்ட பிரித்தாளும் தந்திரமான அபிவிருத்தி என்னும் போர்வையிலும், தமிழர்கள் பலமாக இருக்கவேண்டுமென கூறிக் கொண்டு கிழக்கு என முலாம் பூசி தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக மாவட்டத்திலுள்ள கையாளாதவர்களை பலிக்கிடாவாக்கி தமிழர்களை தெருவில் நிறுத்துவதற்கு போடுகின்ற வலையில் தமிழர்கள் சிக்கிவிடக் கூடாது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் கைக்கூலிகள் தொடர்பாக விழிப்பாக இருக்கவேண்டும். இனச் சுத்திகரிப்புப் போர்வையில் தமிழரின் பலம் வளரவேண்டும் எனக் கூறிக் கொண்டு தமிழர்களை பலவீனமாக்குவதற்கு மேற்கொள்ளும் சதிவலையை உடைத்தெறிவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வாக்குப் பலத்தை அதிகரிக்க வைப்பதற்கும், தமிழ்பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திலும், மாகாணசபையிலும் அதிகரிக்கவைக்க நாங்கள் ஏனைய தமிழர்களின் உரிமையை ஏற்றுக் கொண்ட தமிழ்க் கட்சிகளுடன் பொது உடன்பாட்டிற்கு வந்து பேசுவதற்கு தயாராக இருக்கின்றோமென அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சில தமிழ்கட்சிகளின் ஆதரவாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். எச்சந்தர்ப்பத்திலும் இந்தக் கைக்கூலிகளிடமும், பிரதேசவாதக் கட்சிகளுடனும் நாங்கள் இம் மாவட்டத்தில் சேரமாட்டோம் எனவும், பிரதேசவாதம் இல்லாத ஜனநாயக மரபுகளை ஏற்றுக் கொண்டதமிழக் கட்சிகளுடனே பொது உடன்பாட்டிற்கு வரத் தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.