நானும் கிழக்கை மீட்கத்தான் முனைகின்றேன் ( ஆனால் அரசியலுக்கு வராமல்)டாக்டர்செல்லமாணிக்கம் நீதிராஜன்

 

யுத்தம் முடிந்து சில காலம்களில் சம்பந்தன் அவர்களிடம் சொன்னேன் இன்றைய சூழ்நிலையில் அரசியல் தீர்வு சாத்தியமாகாது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கான செயட்திட்டம்களை முன்னெடுங்கள் என்றும், அத்துடன் தமிழ் அரசுக் கட்சியை பலப்படுத்தி அபிவிருத்திக்கு முதன்மைகொடுத்து செயட்படுவதுதான் காலத்தின் தேவை என்றேன். அரசியல் தீர்வுக்கு தெற்கில் ஒரு சாதகமான ஒரு சூழ்நிலை ஏற்படும் போதுதான் அதை முன்னகத்த முடியும், யுத்த வெற்றிக்களிப்பில் இருப்பவர்கள் ஒரு அரசியல் தீர்வுக்கு முன்வருவார்கள் என்பது சந்தேகமே என்றேன். அது அன்றைய காலத்தில் எடுத்திருக்கவேண்டிய முடிவு. ஆனால் அரசியல் தீர்வு என்று காலம் நகர்ந்தது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயத்த மகிந்த அரசிடம் கேட்டு இருந்தால் தமிழர்களை திருப்திப்படுத்த மகிந்த அரசு அதை செய்து இருக்கலாம். அதை தமிழரசுக் கட்சி/ தமிழ்தேசியக்கூட்டமைப்பு கேட்டார்களா என்று யாரும் கூற முடியுமா?
பிள்ளையான் மகிந்த ஆட்ச்சிக்காலத்தில் முதலமைச்சராக இருந்தவர், அவர்கூட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயத்த முனைந்தாரா? , அல்லது கிழக்கை விடுவித்தாரா?

புலிகள் 30 வருடம் வடகிழக்கை கட்டுப்படுத்தி வந்தவர்கள். கருணா மட்டு அம்பாறை தளபதியாக பல வருடம் இருந்தவர். நினைத்து இருந்தால் இவர் அதை இலகுவாக தரம் உயர்த்தி இருக்கலாம்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு/ தமிழரசுக்கட்சி அரசியல் தீர்வு சர்வதேச விசாரணை , சர்வதேச நீதிமன்றில் கோத்தபாயவை நிறுத்தவேண்டும் என்று காலத்தை வீணடிக்கின்ற கட்சி என்று தெரிந்து வைத்துக்கொண்டு ஏன் அதில் போட்டியிட்டு வென்றபின்பு அது மக்களை ஏமாற்றுகின்றது என்று வெளியில்வந்து இன்று கிழக்கை மீட்கப்போகின்றேன் என்று வியாழேந்திரன் சொல்லுவது நகைப்புக்கு இடமான வேலை இல்லையா?
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏமாற்றுகின்றது என்று அன்றே வியாழேந்திரனுக்கு புரியவில்லையா?
அபிவிருத்திதான் முக்கியம் கிழக்கை காப்பாற்றவேண்டும் என்று அன்றே இவருக்கு தெரியவில்லையா?
அன்றே இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேராமல் ஒரு புதிய அணியை உருவாக்கி மக்களுக்கு இன்று அபிவிருத்திதான் முதலானவிடயம், கிழக்கை காப்பாற்றவேண்டும் என்று முன்வந்து இருந்தால் இவரை நான் பாராட்டி இருந்து இருப்பேன், சிலவேளை ஆதரித்தும் இருந்து இருப்பேன். தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டு வென்ற பின்பு அந்த பாராளுமன்ற உறுப்புரிமையை வைத்துக்கொண்டு கிழக்கை விடுவிக்க போகின்றேன் என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ளமுடியாமலே இருக்கிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயத்தவேண்டும் என்று முன்பே இவருக்கு தெரியவில்லையா? இப்பதான் தெரிந்ததா?

நானும் கிழக்கை விடுவிக்கத்தான் செயட்படுகின்றேன். அரசியலில் ஈடுபடாமல் எந்த விளம்பரமும் இல்லாமல் செய்கின்றேன். சுனாமிக்கு பின்பு இருந்து பல நூற்றுக்கணக்கான பெற்றோர்களை இழந்த அல்லது தகப்பனை இழந்த சிறார்களுக்கு தொடர்ந்து நிதிஉதவி வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்கி புலம்பெயர்ந்த அமைப்புகளுடன் இணைந்து செயட்படுத்திவந்தேன். இதற்க்கு பல லட்ஷம் எனது சொந்தப்பணத்தையும் செலவு செய்து இருக்கின்றேன். அதைவிட விதவைகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்திவந்தேன். இதைவிட நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் நிதி உதவி பெற இணைப்பு பாலமாக அமைத்து இருக்கின்றேன்.

இந்த திட்டம் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டம்களில் மட்டும் அல்லாது வன்னியிலும் விஸ்தரிக்க காரணமாக இருந்தேன். எனது எண்ணத்தில் தோன்றி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த திட்டம் வன்னியில் பல ஆயிரக்கணக்கான சிறார்களுக்கு உதவி புரிந்து வருகின்றது.

மட்டக்களப்பு புலம்பெயர்ந்த அமைப்புகள் எல்லாவற்றையும் இந்த திட்டத்துக்குள் கொண்டுவர எனது சொந்தப்பணத்தில் வெளிநாட்டு பயணம் செய்து எனது சொந்தப்பணத்தில் ஹோட்டல்களிலும் நின்று முயன்றும் அது சிலகாலத்தின் பின்பு வெற்றியளிக்காமல் போனதால் அது கிழக்கு மாகாணத்தில் ஒரு தடங்கல் நிலையில் இருக்கிறது. மட்டக்களப்பு அமைப்புகள் எல்லாம் தனித்தனியாக செயட்படவே விரும்புவதால் இத்திட்டம் தொடர்ந்து செயட்படாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதைவிட மட்டு அம்பாறை மாவட்டம்களில் இருந்து போதிய ஆதரவு வராததும் இன்னொரு காரணம்.
இதை நான் எழுதவேண்டிய தேவை எனக்கு இல்லை, எழுதவேண்டிய காரணம் நானும் கிழக்கை விடுவிக்கத்தான் செயட்படுகின்றேன். அரசியலில் ஈடுபட்டுதான் கிழக்கை விடுவிக்கவேண்டும் என்றில்லை.

நியாயமானவர்கள் யாரும் கிழக்கை மீட்க அரசியலில் ஈடுபட முன்வருவார்களா என்றுதான் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். அப்படிவந்தால் அவர்களை ஆதரிப்பேன். அப்படி யாரும் இதுவரை வந்ததாக தெரியவில்லை.

போலியாக கிழக்கு அரசியலை கையில் எடுத்து நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் இருப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.
நானும் கிழக்கை மீட்கத்தான் முனைகின்றேன் ஆனால் அரசியலுக்கு வராமல்.

ஒவ்வொருவரும் சுயலாபாம்களைவிட்டு சுய விமர்சனம்களையும் விட்டு சிறிதளவில் செயட்பட்டால் கிழக்கு தானாகவே மீட்கப்பட்டுவிடும்.