மட்டக்களப்பு மக்களின் பெரும்பான்மையான விருப்பத்தை நிராகரிக்க முடியாது – இரா.துரைரெட்ணம்

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ வேட்புமனு தாக்கல் செய்த அன்றிலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்களாகிய நாங்கள் அவருக்கே வாக்களிக்க தீர்மானித்துவிட்டோம். என மக்கள் குரல் எழுப்பும் நிலையில் மக்கள் விருப்பத்தை எம்மால் நிராகரிக்க முடியாது. அம் மக்கள் விரும்பிய வேட்பாளருக்கே வாக்களிக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுடைய கட்சிகள் அதிகாரப்பங்கீடு தொடர்பாக எடுத்த முடிவால் தமிழ்சமூகம் வெறுக்கின்ற நிலையில், அதிகாரப்பங்கீட்டை நிராகரித்த கோத்தாபாயவுக்கு எதிராகவும், அவர்களால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழின படுகொலைக்கு எதிராகவும், இனவாதசெயற்பாடுகள் தொடர்பாகவும் கடந்தகால ஆட்சியில் தமிழர்கள்பட்ட துன்பதுயரங்களை மறப்பதற்கில்லை.

அந்த ஆட்சி மீண்டும் பதவிக்கு வருவதற்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது ஒரளவிற்கேனும் சமாதான ஜனநாயக் சுவாசக்காற்றை சுவாசிப்பதற்கும் தமிழர்களின் அபிலாசைகளை ஓரளவிற்கேனும் தீர்த்துவைப்பதற்கு உறுதி பூண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவுக்கு நாங்கள் வாக்களிப்பதற்கு தயாராக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பெரும்பான்மையான மக்கள் முடிவெடுத்து உள்ளோம். எனதேர்தல் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது மக்கள் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக மக்களின் விருப்பத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். மக்களின் விருப்புக்கு மாறாக நாங்கள் விரோதமாக செயற்படமாட்டோமென தேர்தல் தொடர்பாக கலந்துரையாடலில் மக்களின் கேள்விக்குப திலளித்துக் கூறினார்.

பொருளாதாரக்கொள்கை, ஊழலுக்கு எதிரான செயற்பாடு, அபிவிருத்தித் திட்டங்கள், தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களில் தெளிவான முடிவை அறிவித்திருந்தாலும் குறிப்பாக, அரசியற்கைதிகளின் விடுதலை, காணிவிடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்குதல், அதிகாரப்பங்கீடு தொடர்பான விடயங்களில் தெளிவான கருத்துக்களையும் கூறாமல் எம்மக்களிடம் எந்த அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிக்குமாறு கோருவது?

கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் தமிழர்கள் 40வீதம், முஸ்லிம்கள் 37வீதம், சிங்களவர்கள் 23வீதம் இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக நான்கு இலட்சம் வாக்குகளில் தமிழ் வாக்காளர்கள் 74வீதம், 295,000 ஆயிரம் வாக்குகளும் – முஸ்லிம் வாக்காளர்கள் 24வீதம் 95,000ஆயிரம் வாக்குகளும்- சிங்களவாக்காளர்கள் 2வீதம் 8000ஆயிரம் வாக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இலட்சம் தமிழ் வாக்குகளில் தமிழ் வாக்காளர்கள் குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகளை அளிக்கவில்லை. இரண்டு இலட்சம் வாக்குகளே அளித்தார்கள். ஆனால் கடந்த உள்ள+ராட்சித் தேர்தலில் போட்டித்தன்மை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் குறிப்பிட்ட வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட்டது நாம் அனைவருக்கும் தெரிந்தவிடயமே.

இத் தேர்தலைப் பொறுத்தவரையில் தெரிவு செய்யப்படப்போகும் ஜனபாதிபதிக்கு எந்தளவிற்கு அதிகாரங்கள் உள்ளது? அடுத்துவரப்போகின்ற மாகாணசபை, பாராளுமன்றம் தேர்தல்கள் ஊடாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து அதனூடாக பாராளுமன்றத்திலேயே கூடுதலான அதிகாரங்கள் அமுலாக்கப்படும்.
இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மூன்று இனங்களும் தங்களது சமூக இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும், அதிகார அரசியலை அமுலாக்குவதற்கும், ஒவ்வொருவரையும் வாக்களிக்கவைப்பதற்கும், வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வைப்பதற்கும். தமிழ், முஸ்லிம், சிங்களக் கட்சிகளுக்கிடையில் போட்டிபோட்டு வேலை செய்யும் நிலையில் தமிழர்களின் இருப்பை வலுவடையச் செய்து தமிழர்களின் ஓற்றுமையை பலமடையச்செய்ய இங்குள்ள தமிழ்க் கட்சிகளுடன் பேசி சில பொதுவான வேலைகளை அமுல்படுத்த உள்ளோம்.

எனவே வாக்களிப்பதென்பது ஒவ்வொருவரின் உரிமையாகும். இவ்உரிமையை வேறொருவருக்கும் விட்டுக்கொடுக்கலாகாது. என்றார்.