450ஆவது நாள் போராட்டத்தில் முதற்கட்ட முன்னேற்றம் !

பொத்துவில் கனகர்கிராமமக்களின் 225ஏக்கர்காணி நிலஅளவைஇன்று
  ஆரம்பம்!


கடந்த 450நாட்களாக சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டுவந்த பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ்மக்களின் காணிகளை 
இன்று(7) வியாழக்கிழமை துப்பரவுசெய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அதாவது அவர்கள் கடந்த 450நாட்களாக மேற்கொண்டுவந்த தொடர்போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது.
அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் 60ஆம் கட்டை ஊறணி எனுமிடத்தில்கனகர்கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப்போராட்டம் தொடங்கி நேற்றுடன் 450ஆவது நாளாகிறது.
அவர்கள் கடந்த வருடம் 2018.08.14ஆம் திகதி இப்போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த 450ஆவது நாளில் அங்கு வாழ்ந்த 125குடும்பங்களது காணிகள் முதற்றடவையாக அரச ஏற்பாட்டில் நிலஅளவை செய்யப்படுவதற்காக துப்பரவுசெய்யப்படுகி;றது.

குறித்த கனகர்கிராம மக்களின்  225ஏக்கர் காணி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரையின்பேரில் பொத்துவில்பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜா முன்னிலையில் நிலஅளவை செய்யப்படுகிறது.


இன்று (7) வியாழக்கிழமை நிலஅளவைசெய்வதற்காக காடுமண்டிக்கிடக்கும் அப்பிரதேசம் டோசர் கனரக இயந்திரம் பாவிக்கப்பட்டு துப்பரவுசெய்யப்படுகிறது. இப்பணி இன்று(7) பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜா முன்னிலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட நிலஅளவைத்திணைக்களத்தினர் நிலஅளவைக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

அம்பாறை அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க பொத்துவில் பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜாஅம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
அதேவேளை குறித்த 22ஏக்கர் காணியை நேற்றுமுன்தினம் அங்கு அரசஅதிபரின் பணிப்பின்பேரில் சமுகமளித்த வனபரிபாலன இலாகா அடையாளப்படுத்தியுள்ளது.
அக்காணிகளில் நேற்று துப்பரவாக்கும்பணி ஆரம்பித்தவைக்கப்பட்டுள்ளது. சிலநாட்கள் இப்பணிதொடரும்.
அதன்பின்பு குறித்த மக்களுக்கு இக்காணி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக பொத்துவில் பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் நிலங்களை விடுவிக்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக பொத்துவில் கனகர்கிராம மக்களின் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் அம்பாறை மாவட்ட அரச அதிபர் பண்டாரநாயக்க பொத்துவில் பிரதேசசெயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
உடனடியாக அக்காணியை வனபரிபாலனத்திணைக்களம் மற்றும் நிலஅளவைத்திணைக்களத்துடன் தொடர்புகொண்டு அளந்து அறிக்கை சமாப்பிக்குமாறும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜன் மிகவும் தூதமாக செயற்பட்டு 3தினங்களுள் அதற்கான நடவடிக்கையைமேற்கொண்டதன்பலனாக தற்சமயம் காடுவெளியாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வரலாறு.

இற்றைக்கு 58வருடங்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்துவந்த தமது காணிகளைக்கோரி அந்த மக்கள் போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர். 1960களில் சுமார் 278குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. 1981களில் முன்னாள்  பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30வீடுகளைக்கட்டி கொடுக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்துவந்தனர்.

1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28வருடங்களாக அங்கு  வனபரிபாலனஇலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.

எது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது.  அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம்  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் பிரதேசசெயலாளரும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்ந்தது.

இதற்;கு என்னகாரணம்? அரசாங்கம் திட்டமிட்டு புறக்கணிக்கிறதா? அல்லதுதமிழ்த்தலைமைகளின் பொடுபோக்குத்தனமா? என்பதுபுரியாமலுள்ளது.
அம்பாறைமாவட்டத்தமிழர்கள்எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இவ்வாறு தீர்வு இழுத்தடிக்கப்பட்டுவருகிறது. கல்முனை வடக்கு பிரதேசசெயலகதரமுயர்த்தல்விவகாரம் வட்டமடுப்பிரச்சினை மல்லிகைத்தீவு நச்சுநீர் விவகாரம் தொட்டாச்சுருங்கிவட்டைப்பிரச்சினை அதேபோல் கனகர்கிராம காணிமீட்புப்போராட்டம் போன்ற எந்தவொரு பிரச்சினைக்கும்தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
இன்று நாட்டில் ஜனாதிபதிதேர்தல்பற்றி அனல்பறக்கும் கதைகள் தினம் தினம்ஊடகங்களில் வலம்வருகின்றன. சஜித்தா? கோட்டாவா? யாருக்கு வாக்களிப்பது? ஜ.நா.தீர்வை அமுல்படுத்துபவருக்கு தமிழ்மக்கள்வாக்களிப்பார்கள் ;என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் இங்கு தமிழ்ப்பெண்கள்வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டு போராடிவருவது அவர்கள்கண்களுக்குத் தெரியவில்லை. தாம்பூர்வீகமாக வாழ்ந்த நிலத்தையே கேட்கிறார்கள். தவிர மாற்றான் காணியையோ அரசகாணியையோ அவர்கள் கேட்கவில்லை.
இந்த நல்லாட்சியைக்கொண்டுவர தமிழ்மக்களின் பங்களிப்பை அனைவரும் அறிவார்கள். மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என தமிழ்மக்கள் நினைத்தார்கள். அதன்பலாபலனே அது. யாரும் சொல்லி வாக்களிக்கும் நிலையில் தமிழ்மக்கள்இன்றில்லை.
அதேபோலத்தான்இன்றைய ஜனாதிபதித்தேர்தலிலும் யாரைக்கொண்டுவரவேண்டும் என தமிழ்மக்கள் தீர்மானிப்பார்கள். அதன்படி அது நடக்கும். ஒன்றில் பேய் அல்லது பிசாசு.அவ்வளவுதான்.
நல்லாட்சிஜனாதிபதி தமிழ்மக்களுக்கு செய்த கைங்கரியத்தை நாமறிவோம். எனவே சிந்தித்துச்செயற்படுவோம்.இனியும் யாரும் ஏமாற்றாமல் சுயபுத்தியுடன் செயற்படுவோம.

எதிர்வரும் மாரிக்கு முன்பாக இந்த ஏழைத்தமிழ்மக்களின்  வாழ்வில் ஒளியேற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைஎடுக்க வேண்டுமென்று எதிர்பார்த்தோம். அது இன்று நிறைவேறத்தொடங்;கியிருப்பதுகண்டு சம்பந்தப்பட்ட சகலருக்கும் நன்றிகூறுகின்றோம்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்