வாழைச்சேனையில் ஹிஸ்புல்லாவின் கூட்டம் பலத்த பாதுகாப்பு – சிலர் கூச்சல்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும், ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கல்குடா தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வாழைச்சேனை ஹைறாத் வீதியில் புதன்கிழமை இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குழப்பங்கள் ஏற்படும் என்ற காரணத்தினால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து. குறித்த பாதுகாப்பில் வாழைச்சேனை, கரடியனாறு பொலிஸார் வருகை தந்ததுடன், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் ஆதரவாளர்கள் உரையாற்றும் போது குழுமியிருந்த சிலர் கூச்சலிட்டு குழப்பத்தினை ஏற்படுத்த முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை சீர் செய்தனர்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் யூ.எல்.அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை உறுப்பினர்களாக எம்.தாஹிர், எம்.றஹீம், ஊடகவியலாளர் எம்.பாரிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.