வீதி விபத்தின்போது வயோதிபர் ஒருவர் மரணம்

ஒலுவில் பிரதேசத்தில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தின்போது வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஒலுவில் பிரதேசத்திற்குச் செல்லும் பகுதியில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியினைக் கடக்க முற்பட்ட வயோதிபர் மீது  வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிந்த வயோதிபர் ஒலுவில்-06 ஆம் பிரிவு, தைக்கா வீதியினைச் சேர்ந்த சீனித்தம்பி இப்றாலெவ்வை என்ற 67 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளார்.

விபத்தின்போது படுகாயமடைந்த வயோதிபர் பாலமுனை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த வயோதிபரின் சடலத்தினை பார்வையிட்ட அட்டாளைச்சேனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கட்டளையிட்டதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சந்தேச நபர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளதுடன், விபத்துத் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.