மனம் இருந்தால் போதும் ஒரு மர வனம் உருவாக்கலாம் – பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம்.

எத்தனையோ உட்கட்டுமான அபிவிருத்திகள் தராத மன நிறைவை இந்த திட்டம் எமக்குத் தந்துள்ளது உண்மை. “மனம் இருந்தால் போதும் ஒரு மர வனம் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையில்” இத்திட்டத்தை ஒரு நிலைபேறான ஒரு வெற்றியை நோக்கிச் செயற்படுத்துவதற்கு நாம் முன்வந்துள்ளோம்.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.
மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டம் திட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை (01) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில் இடம்பெற்றது. இதன்போது தலைமையுரை நிகழ்த்துகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
பல நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற மியோவாக்கி முறையிலான காடுவளர்ப்பு முறையினை அறிமுகம் செய்து அதனை முன்னோடித்திட்டாக இப்பிரதேசத்தில் அறிமுகம் செய்து சுற்றாடல் மூலமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் அக்கறையைக் காண்பிக்கின்றவிடத்து, இதனை நாம் அமுல்ப்படுத்தியுள்ளோம்.
மிகக் குறைந்த நிலப்பரப்பில் அடர்வனம் ஒன்றை உருவாக்குகின்ற ஒரு முயற்சி இது. இத்திட்டம் பற்றி வலைத்தளங்களில் நாங்கள் பார்வையிட்டதன் பின்னர் எமது பிரசேத்தில் உள்ள கிராம உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் எனைய உத்தியோகஸ்த்தர்களுடன் கலந்துரையாடியதன் நிமிர்த்தம் நாம் அதனை எமது பிரதேசத்தில் முதன் முதலாக களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில் நடைமுறைப்படுத்த தேர்வு செய்துள்ளோம்.
இந்த மாதிரித்திட்டத்திற்காக நாங்கள் 1000 சதுர அடி நிலப்பரப்பைத் தேர்வு செய்து, அதனுள் 5 அடி குழி வெட்டி, அதனுள் தலா ஒவ்வொரு அடிக்கும் தென்னை ஓலை, தேங்காய் உரிமட்டை, வாழை மட்டை இலைகள், காய்கறி கழிவு இலைகள், மாட்டெரு, மணல் ஆகியன படை, படையாக இட்டு பண்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நடப்படும் 400 இற்கு அதிகமான மரங்களுக்காக போசனைகள் இதனுள் இடப்பட்டுள்ளன.
எமது இந்த முன்மாதிரியான செயற்றிட்டத்திற்கு இப்பகுதி கிராமசேவகரின் முயற்சியினால், இப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குழிவெட்டி பண்படுத்தியுள்ளார்கள். இன்னும் 2 வருடங்களில் 10 வருடங்களுக்குரிய மர வளர்றசறியைக் காண்பிக்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நாம் வலைத்தளத்தில் பார்வையிட்டு இதனை எமது பிரதேசத்தில் அமுல்ப்படுத்துவதற்குத் தீர்மானித்தபோது அதற்கு எமக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந் ஆகியோர் எமது பிரசேத்திற்கு ஏற்றவகையில் இத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு எமக்கு ஆலோசனை வழங்கியிருந்தர்கள்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவு காணி என்கின்ற வளத்தை மிக அரிதாகக் கொண்டிருக்கின்றது. இந்நிலையிலும் இந்த திட்டத்தை மிகப் பொருத்தமான திட்டமாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம்.
எத்தனையே உட்கட்டுமான அபிவிருத்திகள் தராத மன நிறைவை இந்த திட்டம் எமக்குத் தந்துள்ளது உண்மை. “மனம் இருந்தால் போதும் ஒரு மர வனம் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையில்” இத்திட்டத்தை ஒரு நிலைபேறான ஒரு வெற்றியை நோக்கிச் செயற்படுத்துவதற்கு நாம் முன்வந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.