ஆசிரியர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணானவகையில் விண்ணப்பம் கோரி நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிராக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட தமிழ் மொழி மூல ஆசிரியர் சமூகத்தினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மொழி மூல ஆசிரியர் சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் நவாஸ் சௌபீ தலைமையிலான குழுவினர் இது தொடர்பான முறைப்பாட்டினை நேற்று கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் கையளித்து வைத்துள்ளனர்.

இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணானவகையில் விண்ணப்பம் கோரி அதனடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இலங்கை அதிபர் சேவை தரம் 111 இற்கான நியமனத்தின் காரணமாக எனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அனுமதிக்கப்பட்ட பதவியினுள் நிலவுகின்ற வெற்றிடங்களுக்காக ஆர்ச்சேர்ப்புச் செய்யும் போது சிங்களம் மற்றும் தமிழ் என்ற மொழி ரீதியில் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனியாக ஆட்சேர்ப்புச் செய்யப்படும் என பிரமாணக்குறிப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தும் அது மீறப்பட்டுள்ளது.

விண்ணப்பம் கோரப்பட்ட போது தமிழ் மொழி மூலம் எத்தனை வெற்றிடங்கள், சிங்கள மொழி மூலம் எத்தனை வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்ற விபரம் தெளிவாகக் குறிப்பிடப்படாமல் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதுடன் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளித்த போது வெற்றிடங்களின் எண்ணிக்கையைச் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமென அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் எமக்கு வழங்கப்படவில்லை.

 

இதன் மூலம் இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பைத் திட்டமிட்டு கல்வி அமைச்சு மீறியதன் ஊடாக எமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.