வந்தாறுமூலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு – கொழும்பு வீதி வந்தாறுமூலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள காயான்குடா கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கராசா சுதாகரன் (வயது 34) என்பவரே பலியாகியுள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த ஜீவபுரம் பாலையடித்தோணாவைச் சேர்ந்த குருபரன் சுதர்ஷ‪ன் (வயது 25) என்ற இளைஞர்  காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை சந்திவெளியிலிருந்து செங்கலடி நோக்கி செல்லும்போது வந்தாறுமூலையில் வைத்து வேன் ஒன்றில் மோதுண்ட நிலையிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.