குழந்தை மரணம் ; மட்டக்களப்பு வைத்தியசாலை முன் நீதிவேண்டி பெற்றோர், உறவினர்கள் போராட்டம்

பிரசவத்தின்போது குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதி வேண்டி குழந்தையின் சடலத்துடன் வைத்தியசாலை விடுதிக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

 

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த குழந்தையின் பெற்றோருக்கு திருமணமாகி சுமார் 5 வருடத்தின் பின் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் குழந்தையை பிரசவிப்பதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தெரிவித்ததையடுத்து குழந்தை பிரசவிப்பிற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் கர்ப்பவதியான தாயாரை வைத்தியசாலை அனுமதித்தனர்.

எனினும் குறித்த பெண் சுகப்பிரசவம் மூலமே குழந்தையினைப் பிரசுவிக்க வேண்டும் என வைத்தியர்கள் கோரிய நிலையில் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை பிரசவிக்குமாறு உறவினர்களினால் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று புதன்கிழமை சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை  உயிரிழந்துள்ளது.

 

இதையடுத்து இவ்வாறு குழந்தை இறந்தமைக்கு நீதிவேண்டி இறந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வைத்தியசாலையின் விடுதியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொலிஸார் வரவரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.