தற்கொலைப் பயங்கரவாதி எச்சங்களை காத்தான்குடியில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று இஸ்லாமிய மக்கள் மறுப்பது எந்தவகையிலும் நியாயமும் இல்லை – வசந்தராஜா

மட்டக்களகப்பு சியோன் தேவாலயத்தில் தாற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் ஒரு பயங்கரவாதி என்று காத்தான்குடி மக்கள் சொல்லலாம். ஏன் முழு முஸ்லீம் உலகமே சொல்லலாம். ஆனால் அவர் எங்களுடையவர் அல்ல. எங்கள் மதத்தைச் சேர்ந்தவர் அல்ல அவர் ஒரு இஸ்லாமியர் அல்ல என்றும் அவரது உடல் எச்சங்களை காத்தான்குடியில் உள்ள முஸ்லீம் மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று  இஸ்லாமிய மக்கள் மறுப்பது எந்தவகையிலும் நியாயமும் இல்லை  என  த.வசந்தராஜா தெரிவித்தார்.

கடந்த ஏப்பிரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி அசாத்தின் உடல் எச்சங்களை மட்டக்களப்பு இந்து சேமக்காலையில் புதைத்தது பற்றியும் அவ்வெச்சங்கள் இந்து சேமக்காலையிலிருந்து இப்போது அகற்றப்பட்டு மீண்டும் வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்காக இடம் தேடப்படும் நிலை பற்றியும், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் முக்கிய பதவி தாங்குனர் என்ற வகையில் அவரது கருத்து என்ன என புதன்கிழமை (25) தொடர்பு கொண்டு கேட்டபோது  த.வசந்தராஜா இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிககையில்….
நான் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயலாளாராக கடமை ஆற்றி வருகின்றேன். ஆனால் சிவில் சமூக அமைப்பின் செயலாளராக நான் பதில் அளிப்பதாயின் நான் சிவில் சமூக அமைப்பினரது அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நான் ஒரு தமிழ் குடிமகனாக இதற்கு எனது பதிலைத் தரமுடியும்
இஸ்லாமிய மக்களின் மனதை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. ஆனால் எனக்கு உண்மை என்றும் படுகின்ற, சரி என்றும் படுகின்ற விடயத்தினை இங்கு நான் சொல்ல விரும்புகின்றேன்.
உயிர்த்த ஞாயிறு ஏப்பிரல் 21 அன்று கிறிஸ்த்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது கடவுளை ஆராதனை செய்வதற்காக மட்டக்களப்பு சியோன் ஆலயத்தில் கூடியிருந்த வேளையில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.
அதனால் 30இக்கு மேற்பட்ட ஒன்றும் அறியா ஒருபாவமும் செய்திராத அப்பாவி தமிழ் மக்கள் அதாவது தமிழ் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும், பிள்ளைகளும் துடிதுடித்து இறந்து போனார்கள், 75 பேருக்கு மேற்பட்டவர்கள், காயமடைந்து அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகளை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் பலபேர் உளரீதியாகத் தாக்கப்பட்ட நிலையில் அசாதாரண வாழ்க்ககை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய தண்டனையை அனுபவிப்பதற்கு அவர்கள் செய்த குற்றம் என்ன? இம்மக்களை  இன்னுமொரு மதத்தின் பெயரால் இலக்கு வைத்து அவர்களை பதைபதைக்க துடிதுடிக்க கொன்றழித்த அத்தகைய கொலையாளியின் உடல் எச்சங்களை  அதே தமிழ் மக்களின் இந்து சேமக்காலையில் புதைத்தது தமிழ் மக்களின் உணர்வுகளை பாரதூரமாக நோகடித்த ஒரு செயலாகும்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் குறிப்பாக இந்துக்களைப் பொறுத்தவரையில் தங்களது சேமக்காலையை ஒரு புனிதமான இடமாகக் கருதுகின்றார்கள். மரணித்தவர்களுக்காக அங்கு சமயக்கிரியைகளை செய்கின்றார்கள். தேவாரம் திருவாசகங்களைப் பாடுகின்றார்கள்.  மரணித்த ஒருவரின்; புதைக்குழிக்கு அருகேதான் மரணிக்கும் உறவினர்களை ஏதோ ஒருவித நம்பிக்கையோடு புதைக்கின்றார்கள்.  ஆத்மாக்களின் நடமாட்டம் உண்டு என்றும், மறு உலகவாழ்வு உண்டு என்றும் பல்வேறுவிதமான நம்பிக்கைகளைக் கொண்டு அவர்கள் வாழுகின்றார்கள். இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் வாழுகின்ற மக்களது உணர்வுகளை நோகடிக்கும் ஒரு செயலாகவே அது இருந்தது.
அது அப்படி இருக்க நான் சிலகாரியங்களை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்…
ஓசாமா பின்லாடன் ஒரு பயங்கரவாதி என்று உலகின் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவரை அமெரிக்கப் படைகள் பாகிஸ்த்தான் எல்லை ஒன்றிலே பிடித்துக் கொலை செய்து தங்களது விமானத்திலே ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இடைநடுவில் அவ்வுடலை கடலிலே தள்ளிவிட்டே தங்கள் நாட்டுக்குச் சென்றார்கள் அமெரிக்கப்படை வீரர்கள்.
நாகரீகத்தில் உயரிடம் வகிக்கின்ற அமெரிக்க மக்கள் ஒசாமா பின்லாடனின் உடல் தங்கள் நாட்டு மண்ணில் படக்கூடாது என நினைத்தார்களோ என்னவோ தெரியாது. அதனால்த்தான் அவர்கள் அவ்வுடலை கடலில் தள்ளிவிட்டுச் சென்றிருந்தார்கள் என நம்பப்படுகின்றது.
ஆனால் அவ்வுடல் கடலில் தள்ளப்பட்டதை அறிந்த உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் உலகின் பலபாகங்களில் இருந்தும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். தங்கள் இஸ்லாமிய மகன் ஒருத்தரின் உடலுக்கான மதக்கடமைகளை செய்வதற்கு அமெரிக்கர்கள் இடமளிக்கவில்லையே என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதனூடாக ஒசாமா பின்லாடன் இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமானவர் அவர்களது மதத்துக்கு சொந்தமானவர் என்பதை அம்மக்கள் வெளிக்காட்டினர்.
இந்நிலையில் தமிழர்களின் தேசியத் தலைவராகக் கருதப்படுகின்ற பிரபாகரன் அவர்களை பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்றும் அவர் ஒரு பயங்கரவாதி என்றும் உலகநாடுகளில் பல பிரகடனம் செய்திருந்தன. அதேவேளை அவரது அமைப்பின் பெயரால் எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அது மட்டுமல்ல அவரது அமைப்பின்; பெயரால் கைது செய்யப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டார்கள். எவ்வளவுதான் துன்புறுத்தல்களை அனுபவித்த போதிலும் பிரபாகரன் அவர்களை அவர் எங்களது இனத்தைச் சேர்ந்தவர் அல்ல எங்களது மதத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று ஒரு தமிழ் மகன்கூடச் இதுவரை சொன்னது கிடையாது.
அது அப்படி இருக்கையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரி காத்தான்குடியைச் சேர்ந்தவர். அங்குதான் அவர் பிறந்தவர். அங்குதான் அவர் வளர்ந்தவர். அங்குதான் அவர் படித்தவர் தொழுகைக்காக அங்குதான் பள்ளிக்கு சென்றவர். அவரது தாயார் உறவினர்கள் மனைவி மக்கள் அவரது நண்பர்கள் என எல்லோருமே காத்தான்குடியில் இருக்க மட்டுநகரில் உள்ள தமிழ் இந்து மக்களின் சேமக்காலையில் அந்தக் கொலையாளியின் உடற் பாகங்களைப் புதைப்பதில் என்ன நியாயம் உள்ளது?
அவர் ஒரு பயங்கரவாதி என்று காத்தான்குடி மக்கள் சொல்லலாம். ஏன் முழு முஸ்லீம் உலகமே சொல்லலாம். ஆனால் அவர் எங்களுடையவர் அல்ல. எங்கள் மதத்தைச் சேர்ந்தவர் அல்ல அவர் ஒரு இஸ்லாமியர் அல்ல என்றும் அவரது உடல் எச்சங்களை காத்தான்குடியில் உள்ள முஸ்லீம் மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று  இஸ்லாமிய மக்கள் மறுப்பது எந்தவகையிலும் நியாயமும் இல்லை என்பதுதான் எனது எண்ணம்.
எனவே அந்த இளைஞனை காத்தான்குடி மக்கள் தங்களுடையவர் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். அவரது உடலை அவர்கள் பொறுப்பெடுக்க வேண்டும். அவருக்கான சமயக்கிரியைகளை அவர்கள் செய்கின்றார்களோ இல்லையோ அவரது உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம் என அவர் தெரிவித்தார்.