எச்சங்களை அகற்ற சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காட்டில் இரகசியமாகப் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதென, மட்டக்களப்பு மாநகரசபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் தலைமையில், நேற்று (28) நடைபெற்றது.

இந்த அமர்வில், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மாநகரசபையின் எந்த அனுமதியும் பெறப்படாமல், மாநகரசபையின் அதிகாரத்துக்குட்பட்ட இந்து மயானத்தில் குறித்த தற்கொலைதாரியின் எச்சங்களைப் புதைத்ததற்கு மாநகர மேயர் இதன்போது கண்டனம் தெரிவித்தார்.

குறித்த மனித எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு, பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூல முறைப்பாட்டைச் செய்து, அதனூடாக நீதிமன்றக் கட்டளையைப்பெற்று, அதை அங்கிருந்து அகற்றுவது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சட்ட நடவடிக்கை ஊடாக தற்கொலைதாரியின் எச்சங்களை மீண்டும் தோண்டியெடுத்து வேறு இடத்தில் புதைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதென, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.