அறநெறிக்கல்வி முக்கியமிழக்கின்றதா?

– படுவான் பாலகன் –

இப்போது எல்லாம் அறநெறிப் பாடசாலைகளுக்கு பிள்ளைகள் செல்வதில்லை. முதலெல்லாம் ஞாயிற்றுக்கிழமையானால் அறநெறிப்பாடசாலைகளிலேயே நிற்போம் என்கிறார் சிதம்பரப்பிள்ளை. மகிழடித்தீவு சந்தியில் நின்ற கணேசபிள்ளையுடன் பேசும்போதே இதனைக் குறிப்பிட்டார். அறநெறிப்பாடசாலைகள் சமயத்தின் ஊடாக ஒழுக்கத்தினை புகட்டும் நிலையங்களாக இருந்தன. பெற்றோர்களும் சமயக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அறநெறிப்பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பினர். இன்றைய சூழலில் அறநெறிப்பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதில்லை. அறநெறிக்கல்வியினை அவசியமற்றதாக  அல்லது தேவையில்லையென உணர்ந்திருக்கின்றனரோ தெரியவில்லை. அதேநாளில் நடைபெறுகின்ற வேறுபாடங்களிலான தனியார் வகுப்புக்களுக்கே அனுப்புகின்றனர். பணத்தினை கொடுத்து வேறு வகுப்புக்களுக்கு அனுப்பும் அக்கறையை பணமில்லாமல் போதிக்கப்படும் அறநெறிக்கல்விக்கு முக்கியத்துவமளிக்காது செயற்படுகின்றமை மனவேதனையே. ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி வகுப்புக்களை தவிர்ந்த வேறுயெந்த வகுப்புக்களும் நடைபெறக்கூடாதென அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட,பணத்திற்காக தனியார் கல்விநிலையங்களை நடாத்தும் சிலர், சமுகத்தின் மீது அக்கறையின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏனைய வகுப்புக்களை நடாத்துவதும் கவலைக்குரியதே. கல்வி கற்ற சமுகத்தினர் சிலரே இத்தவறினை இழைக்கின்றனர். தீர்மானங்களும், சட்டங்களும் ஒருபக்கமாகவிருந்தாலும் தமது சமுகத்தின் நன்மை கருதி உள்ளார்ந்து சிந்திக்காது செயற்படுகின்றமை வேதனைக்குரியதே என்கிறார் சிதம்பரப்பிள்ளை.

முன்பெல்லாம் பாடசாலை சென்று கற்காவிட்டாலும்,பெற்றோரிடம் இருந்து நல்ல ஒழுக்கத்தினைப் பிள்ளைகள் கற்றுக்கொண்டனர். வயதிற்கு மூத்தவர்களுக்கு மரியாதை கொடுத்தனர், அவர்களின் சொற்படி நடந்து கொண்டனர். இயலாது எனக்கூறாமல் காரியத்தினை நிறைவேற்ற முன்வருவர். கூட்டாக இணைந்து செயற்படுவர், நல் தலைமைத்துவப் பண்பும் இருந்தது. தற்காலத்தில் பிள்ளைகள் எல்லோரும் பாடசாலை சென்று புத்தகத்தினை கற்கின்றனர். ஆனால் அவர்களிடம் ஒழுக்கத்தினை காணவில்லை. முன்பெல்லாம் எவ்வாறு ஒழுக்கத்துடன் வாழ்ந்தார்களோ அதற்கு எதிர்மாறாகத்தான் நடந்துகொள்கின்றனர்.

‘இப்போது நடைபெறுவது கலியுக காலம், அவ்வாறுதான் ஒழுக்கமின்றி பிள்ளைகள் நடந்துகொள்வார்கள்’ என பழியை காலத்தின் மீது போட்டுவிடுகின்றனர் என்கிறார் கணேசபிள்ளை. முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு கண்டிப்பு இருந்தது. அதை செய்யக்கூடாது,இதைசெய்யக்கூடாது,இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற நல்ல சிந்தனைகளை கண்டிப்பின் ஊடாகவே புகட்டினர். இதனால் தவறான நடத்தைகளுக்கு பிள்ளைகள் சென்றமை மிகமிகக் குறைவே. கண்டிப்பு செய்யக்கூடாதென பலரும் கூறினாலும்,இதன்மூலமாக பெறப்பட்ட ஒழுக்க வெற்றி மேலானதாகவிருந்தது. பாடசாலைகளில் கூட மாணவர்கள் தவறிழைக்கின்ற போது சிறுசிறு தண்டனைகள் வழங்கப்பட்டன. இதனால் பெரிய தண்டனைகளை சிறைச்சாலைகளில் பெற்றுக்கொள்ளாமல் வளர்க்கப்பட்டனர். தற்போதைய சூழலில் புதிய புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டமையினால், தவறுவிடுகின்ற பிள்ளைகள் தண்டிக்கப்படுவதில்லை. தண்டிப்பது குற்றாமாகவிருந்தாலும்,தவறினை பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லியும் அத்தவறினை திருத்திக்கொள்வதில் பெரிதும் அக்கறை காட்டுவதாகத் தெரிவதில்லை. குறிப்பாக பிள்ளைகள் எல்லோரும் பெற்றோர்களுக்கு பயந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்தமை கடந்த கால அனுபவங்களாக இருந்தன. தற்போதைய சூழல் பிள்ளைகளை கண்டு பெற்றோர்கள் அச்சமுறும் நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு அறநெறிக் கல்வியினை பெற்றுக்கொள்ளாமையும் காரணமாகும்.

அறநெறிக் கல்வியின் ஊடாக சிறந்த அறநெறிக்கருத்துக்கள் புகட்டப்பட்டன. இதனை ஏற்றுபிள்ளைகள் நடந்துகொண்டனர். சமய விழுமியங்களை பேணுகின்றவர்களாவும் இருந்தனர். இன்று இவையெல்லாம் நீங்கி சிறுவயதிலே போதை மருந்துகளுக்கு அடிமையாகி,இளைஞர்கள் உருவாகி வருகின்றனர். இதன்காரணமாக நல்லது எது? கெட்டது எது?எனத்தெரியாமல் நடந்துகொள்கின்றனர்.

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அறிவுரைகள் சொல்லமுடியாதுள்ளது. அறிவுரைகளை கேட்பதுதற்கு தயாராகவில்லை. நல்சிந்தனைகளை கூறுகின்ற போது, கூறுகின்றவர்களுக்கு விமர்சனங்களைத் தெரிவிக்கின்றனர். முற்றுமுழுதாக எல்லோரையும் குறிப்பிடாவிட்டாலும் பலரின் செயற்பாடு அவ்வாறு அமைகின்றமையினை காணமுடிகின்றது. இதன்காரணமாக சமுகத்திலே வீண் வாக்குவாதங்களும்,மனக்கசப்புக்களும் உருவாகின்றன. பிள்ளைகளுக்கு புத்தகக் கல்வியினை மாத்திரம் கற்பித்தால் போதாது, புத்தகக் கல்வியை மாத்திரம் கற்ற பல கல்விமான்கள் பலர் சமுகத்தில் தவறிழைக்கின்றவர்களாக,சமுகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். என்று கூறிய கணேசபிள்ளை.‘பிள்ளைகளுக்கு புத்தக கல்வியை போதிக்கும் முன் சிறந்த ஒழுக்க கல்வியினை புகட்ட வேண்டும். இதன்மூலமே சமுகத்திற்கு சிறந்தவர்களை கொடுக்க முடியும். இதற்கு அறநெறிபோன்ற கல்விச்செயற்பாடுகளுக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தேடிபிடிப்பதில் ஆசிரியர்கள் காட்டும் அக்கறையை கூட பெற்றோர்கள் காட்டாமல் இருப்பதே வேதனைக்குரியது‘ எனக்கூறியவர்களாக இருவரும் அவ்விடத்தினை விட்டு அகன்றனர்.