கல்முனையில் தமிழ்மக்களுக்கு விரோதமான அல்லது பாதகமான தீர்வு எட்டப்படுமானால் அதனைநாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கல்முனைமாநகரசபை உறுப்பினரும் ரெலோ உபதலைவருமான ஹென்றிமகேந்திரன் கல்முனையில் நடைபெற்றமக்கள்கூட்டமொனறில் பேசுகையில் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட தமிழர்மகாசங்கம் கல்முனை வடக்கு பிரதேசசெயலக தரமுயர்த்தல் விடயத்தில் சமகாலத்தில் எழுந்துள்ள நலைவரம் தொடர்பாக நேற்றுமாலை(4) ஞாயிற்றுக்கிழமை கல்முனை பல்தேவைக்கட்டடத்தில் பொதுபிரமுகர்களுடனான கூட்டமொன்றை நடாத்தியது.
சங்கத்தலைவர் கே.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஹென்றிமகேந்திரன் மேலும் பேசுகையில்:
இன்று கல்முனையிலிருந்து மக்களுக்கு எதுவுமே தெரிவிக்காமல் கொழும்புக்குச் சென்ற மாநகரசபை தமிழ் உறுப்பினர்கள்சிலர் கல்முனை நகரத்தை விற்றுவிட ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எல்லைகள் தொடர்பான தீர்வுக்கான வரைபை இதுவரைமக்கள் அறியவில்லை. எவருக்கும் தெரியாது .அப்படியெனின் கொழும்பிலிருக்கும் ஒருசிலருக்கா இந்ததீர்வு?
இன்னமும் கல்முனை தமிழர் மடையர்கள் எனநினைத்துக்கொண்டு செயற்படுகின்றார்களா? என்று கேட்கிறேன்.
இவ்வாறு நகரத்தை தாரைவார்த்து விட்டுக்கொடுப்பைச்செய்ய இவர்களுக்கு அதிகாரம்கொடுத்தது யார்?
பாராளுமன்ற உறுப்பினரும் சில மாநகரசபை உறுப்பினர்களும் தமது எஜமான் எனநினைக்கின்ற ஒருவருக்காக எமது பூர்வீக நகரத்தை விட்டுக்கொடுக்க முனைவது ஒருபோதும் ஏற்கமுடியாது. என்றார்.
மூத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர் எல்லைக்காவலன்குஞ்சித்தம்பி ஏகாம்பரம்(வயது 87) பேசுகையில்:
கல்முனை நகரம் தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த பிரதேசம். அதில் வியாபாரம் செய்யவந்தவர்கள் இன்று உரிமைகோருவது புதுமையாகவிருக்கிறது.
இருபக்கமும் ஒத்துதீர்வுகாணும்போது இருசாராரும் விட்டுக்கொடுக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு காலாகாலமாக தொடர்ந்து விட்டுக்கொடுத்துவந்த அதே தமிழ்ச்சமுகம்தான் இன்றும் விட்டுக்கொடுக்கவேண்டும். என்றால் அது எவ்வகையில் நியாயம்?
30வருடகாலப்போராட்டத்திற்கு உரிய நியாயமான தீர்வுவேண்டும். அரைகுறையானதீர்வு வேண்டாம். நகரத்தை விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதில்லை. உரியதீர்வு இன்றேல் போராட்டம் தொடரும். தேர்தலில் பார்ப்போம். என்றார்.
இவ்வாறு பலரும் பலவாறாக கருத்துக்களை ஆக்ரோசமாக்கூறினர்.
இறுதியாக ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. இருக்கின்ற 29 கிராமசேவையாளர் பிரிவுகளுடன் இருக்கின்ற சமகால எல்லைகளுடன் கல்முனை வடக்குபிரதேசசெயலகம் வர்த்தமானி அறிவிப்புச்செய்யப்பட்டு தரமுயர்த்தப்படவேண்டும்.சட்டவிரோதமாகஉருவாக்கப்பட்ட இரு முஸ்லிம்கிராமசேவையாளர்பிரிவுகளும் ரத்துச்செய்யப்படவேண்டும்.
தமிழர் மகாசங்கச்செயலாளர் துரையப்பா இராமகிருஸ்ணன் நன்றியுரையாற்றினார்.