கல்முனை விவகாரம் இராஜாங்க அமைச்சர் பதவியினை பொறுப்பேற்கமாட்டேன்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் அரசாங்கம் இதுவரை காத்திரமான தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை. இதனால் குறித்த விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றை அறிவிக்கும் வரை இராஜாங்க அமைச்சர் பதவியினை பொறுப்பேற்கமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தனது நெருங்கிய முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் குறித்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று (11) வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இடம்பெற்றது.  கடந்த ஜுன் மாதம் இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் மீண்டும் தங்களின் பதவிகளை பொறுப்பேற்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டம் இடம்பெற்ற சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை பிரதேச புத்திஜீவிகளுடன் கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரசிங்கவுடன் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இதனால், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் பாராளுன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களின் ஊடாகவே அவருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த விடயம் தொடர்பில் தனது அதிருப்தியினை ஹரீஸ் வெளியிட்டதுடன் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையினையும் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்ளக, உள்நாட்டு மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன ஆகியோர் நடந்துகொண்ட விடயம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் ஆகியோர் இந்த விவகாரத்தில் சரியான முறையில் நடந்துகொள்ளவில்லை எனவும் இது தொடர்பில் குறித்த இரண்டு கட்சித் தலைவர்களும் சரியான முறையில் பேரம் பேசத் தவறியமையினால் கட்டமான முடிவொன்று வரத் தவறியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கல்முனை விவகாரம், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரம் மற்றும் அப்பாவிகளின் கைது உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை மீண்டும் பொறுப்பேற்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது பிரித்தானிய சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாளை (12) சனிக்கிழமை நாடு திரும்பியவுடன் இராஜினாமச் செய்த முஸ்லிம் அமைச்சர்களின் சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தனது தேர்தல் தொகுதியான கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – விடியல்