கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்றது.பிரதமர் கூட்டமைப்புடன் உத்தரவாதம்

“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதால், மீண்டுமொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. எனவே, வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை விரைவில் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவோம். இதற்கான எல்லைநிர்ணயப் பணிகள் உடன் ஆரம்பமாகும்.”

 
– இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று உறுதியளித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. 
 
கல்முனை விவகாரம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாடாளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
 
இந்தச் சந்திப்பில் பிரதமருடன் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் கலந்துகொண்டார். 
 
அதேவேளை, கல்முனை வடக்குப் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.  
 
கல்முனை வடக்கு உப பிரதேரச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஞா.சிறிநேசன் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். 
 
குறித்த சந்திப்பின்போது கல்முனை உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதற்குப்  பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார். எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கத் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்  உறுதியளித்திருந்தார். 
 
ஆனால், கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அதனைச் செய்ய முடியும் என்று மாவை சேனாதிராஜா எம்.பி. நேற்றைய சந்திப்பின்போது பிரதமரிடம் எடுத்துரைத்திருந்தார்.
 
இது தொடர்பில்  உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் தான் பேச்சு நடத்திவிட்டு இன்று பதிலளிப்பதாக மாவை எம்.பியிடம் பிரதமர் தெரிவித்திருந்தார். 
 
அதற்கிணங்க நேற்றிரவே அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன்பேச்சு நடத்திய பிரதமர், இன்று பிற்பகல் அவரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் கல்முனை வடக்குப் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள்  ஆகியோரையும் நாடாளுமன்றத்திலுள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்துக் கலந்துரையாடினார். 
 
“இந்தக் கலந்துரையாடலின்போது கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதால், மீண்டுமொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. எனவே, வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை விரைவில் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவோம் இன்று பிரதமர் எம்மிடம் தெரிவித்தார்” என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் ‘புதுச்சுடர்’ செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசனிடம் கேட்டபோது இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
 
அவர் மேலும் கூறுகையில், 
 
“கல்முனை உப பிரதேச செயலகத்தை விரைவில் பிரதேச செயலகமாக்குவதற்கான எல்லைகளைப் பிரிக்கும் பணிகளை எல்லை நிர்ணய ஆணைக்குழு உடன் ஆரம்பிக்கும் எனவும் பிரதமர் எம்மிடம் கூறினார். அதேவேளை, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதிகளைக் கையாள அம்பாறை மாவட்ட அரச செயலகத்திலிருந்து கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், அவர்  தற்போதைக்கு அம்பாறை மாவட்ட அரச செயலகத்திலிருந்து தனது பணிகளை மேற்கொள்வார் எனவும் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார். பிரதமரின் இந்த உறுதிமொழிகளினால் இன்றைய பேச்சு சுமுகமாக நிறைவடைந்தது. பேச்சில் பேசப்பட்ட விடயங்களை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் தெரிவிக்குமாறும் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார்” – என்றார்.
Aariyakumar Jaseeharan-