ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு: ‘ரெலோ’ ஜனா அறிவிப்பு

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவேண்டுமென பாராளுமன்றம் மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொருளாருமான கோவிந்தன் ஜனா கருணாகரம்  தெரிவித்துள்ளார்.

அதிகளவான மக்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துவருவதன் காரணமாக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் இந்த தீர்மானத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமையகத்தில் நேற்று (23) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐ.எஸ் ஐ.எஸ் இயக்கத்தின் இலங்கை தலைவர் சர்ஹான் உயிரிழந்துள்ளதாக டீ.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐ.எஸ் ஐ.எஸ் இயக்கத்தின் வேறு ஒருவர் தலைவராக செயற்பட்டுவருகின்றாரா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல நகர, பிரதேசசபைகளில் உள்ள அறபு எழுத்துகள் பொறிக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட இலங்கையின் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 250ற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

500ற்கும் மேற்பட்டவர்கள் உடல்ஊனமுற்றும் காயப்பட்டும் இருக்கின்றனர். அந்த சம்பவம் நடந்து ஒருமாதம் கடந்திருக்கின்றது.

இந்த நிலையில் ஷங்கிரில்லா ஹோட்டலில் குள்டுத்தாக்குதல் நடத்திய குண்டுதாரிகளில் ஒருவர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹ்ரான் என்பது டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சஹ்ரான் தான் இந்த இயக்கத்திற்கு தலைவனாக இருந்தார் என அனைவரும் கருதிக்கொண்டிருக்கின்ற வேளையில் எந்தவொரு இயக்கத்தின் தலைவரும் தான் இறந்து அந்த பயக்கத்தை அழித்ததாக சரித்திரமில்லை என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் சஹ்ரான் இறந்திருக்கின்றார் என்றால் இந்த நாட்டில் இந்த அமைப்பை இயக்கிக்கொண்டிருப்பவர் அந்த இயக்கத்தின் மூளையாக செயற்படுபவர் இன்னமும் உயிருடன் இருக்கின்றார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தமிழ்த் தலைமைகள்.மிதவாதக் கட்சிகளின் தலைமைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்கள்.

நான்காம் மாடிக்கும் புலனாய்வுப் பிரிவினரின் தலைமை அலுவலகங்களுக்கும் அந்தந்த பிரதேசங்களிலிருக்கின்ற படை முகாம்களுக்குக்கூட அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

ஒருசிலர் இந்த நாட்டின் அரச படையினரால் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். குறிப்பாக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் உட்பட இன்னும் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்த நாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கருதப்படுகின்ற அரசியல்வாதிகள், அதிகாரிகளில் பெரும்பாலான மக்களால் விரல்சுட்டிக் காட்டப்படுகின்ற கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, வடமாகாணத்தின் மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் முன்னிலை வகிக்கின்றனர்.

பெரும்பாலான மக்கள் இவர்களை இந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டிருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியும் விசாரணைக்குக்கூட இவர்கள் அழைக்கப்படாது இருப்பதற்கான மர்மம் அரசியல்வாதிகளான எங்களுக்கு தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிலைப்படுத்தி தற்போதைய ஜனாதிபதிக்கு கிழக்குமாகாண ஆளுநர் வாக்குச் சேகரிப்பதற்கு தேவைப்படுவதாகவும் இந்த நாட்டின் பிரதமர், ரிசாத் பதியுதீன் வாக்குச் சேகரிப்பதற்கு தேவைப்படுவதாகவுமே நாங்கள் கருதுகின்றோம்.

250அப்பாவி உயிர்கள் பலியாவதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்த அரசாங்கத்தின் உயர் பதவி வகிப்பவர்கள் மக்கள் இவர்களை குற்றவாளியாக காணும்போது 250அப்பாவி உயிர்கள் பலியாக காரணமானவர்கள் என கருதப்படுபவர்களை காப்பாற்ற நினைத்தால் மக்கள் அவர்களுக்கு எதிர்காலத்தில் தக்க தண்டனை கொடுப்பார்கள்.

அமைச்சர் ரிசாத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படுகின்ற போது கௌரவமான ஒரு அமைச்சரோ ஆளுநரோ தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை மக்கள் முன்பு நிரூபித்து அதன் பின்பு தங்களது பதவிகளை பொறுப்பேற்பதுதான் ஜனநாயகத்தை மதிப்பதும் அவர்களுக்குரிய பொறுப்பாகவும் கருதுகின்றோம்.

இந்த நாட்டின் பிரதமர் உள்ளுராட்சி அமைச்சருக்கு உத்தரவொன்றை பிறப்பித்திருப்பதாக நாங்கள் அறிகின்றோம். இந்த நாட்டில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் மாத்திரமே பாவனையிலுள்ளது. மேலதிகமாகவுள்ள அரபுமொழி எந்தவிதமான காட்சிப்படுத்தலிலும் இருக்கக்கூடாது என அறிவித்திருக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே மாநகரசபை உட்பட பல பிரதேசசபைகளிலே அரபுமொழி காட்சிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழ்மக்கள் 74வீதமாக பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திலே அரபுநாடுகளில் தொழில்நிமித்தம் பணியாற்றிய ஒருசிலரைத் தவிர வேறுயாருக்கும் அரபுமொழியை வாசிக்க முடியும் என நான் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.