பேரினவாத அரசுகள் மாறிமாறி ஆட்சி புரிந்து தமிழ் மக்களை ஏமாற்றியதே வரலாறாகும்.

பேரினவாத அரசுகள் மாறிமாறி ஆட்சி புரிந்து தமிழ் மக்களை ஏமாற்றியதே வரலாறாகும். என முன்னாள் கிழக்குமாகாண சபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள்புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

யுத்தம் மௌனித்து பத்து வருடங்களாகியும் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள் சிறுபான்மை மக்களுக்கானஉறுதி அளிக்கப்பட்ட விடயங்களை முன் வைக்காமல் இழுத்தடித்து தமிழர்களை ஏமாற்றி கொண்டு போகின்ற நிலைமையே வளர்ந்து வருகின்றன.

குறிப்பாக, அரசியல் தீர்வுத்திட்டம், சர்வதேசவிசாரணை, தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை, காணமல் போனோர் விசாரணை, வடக்குகிழக்கு இராணுவக் குவிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்,தமிழர்களின் பாதுகாப்பு,யுத்தத்தால் பாதிக்கப்பட்டஅபிவிருத்தி விடயம் ,கிழக்குமாகாணத் தமிழர்களை விரட்டுகின்ற செயற்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக மாறிமாறி ஆட்சி புரிந்த அரசாங்கம் தமிழர்களையும், அரசியற் தலைமைகளையும், சர்வதேசத்தையும் ஏமாற்றிக் கொண்டே வருகின்றன. இரண்டு தேசியக் கட்சிகளும் யுத்தம் மௌனித்து பத்து வருடத்திற்குள் மாறிமாறி ஆட்சி அமைத்து சிறுபான்மைக் கட்சிகளை ஏமாற்றிக் கொண்டெ வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவு பெற்று பல மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் மாகாணசபைக்கான தேர்தல்கள் நடாத்தப்படாமல் வடகிழக்கு மக்களின் அரசியல் உரிமை மறுக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கில் அதிலும் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட அரச நியமனங்கள் இனவிகிதாசார அடிப்படையில் தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை இது பாரிய அநீதியாகும். நீர்வளம், நிலவளம், வனவளம்,கடல்வளம் என்பவற்றை சூரையாடி வேறு மாகாணங்களுக்கு எடுத்துச் செல்கின்ற அநீதி தொடர் கதையாகவே உள்ளது. இதற்கும் அப்பால் வடகிழக்கு மாகாணங்களை தொடர்ந்தும் அச்சமான சூழ்நிலையில் வைத்திருப்பதற்காககே ஆட்சிபுரிந்த அரசாங்கங்கள் இலைமறை காயாகவே செயற்படுவதை காண முடிகின்றது.

கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைக்கான தேர்தலை இழுத்தடித்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசினால் குறைந்தது ஆறு முஸ்லிம் அமைச்சர்களை நியமித்து கிழக்குமாகாண ஆளுனர் ஒரவரையும் முஸ்லிமாக நியமித்து,வெளிநாட்டவர் தூதுவர் தொடக்கம் மத்திய மாகாண அரசின் நிதி ஓதுக்கீடுவரை தமிழ் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு அபிவிருத்திக்கு மேல் அபிவிருத்திக்காக நிதி ஓதுக்கீடு செய்து வறுமையான தமிழ்பிரதேசம் சூடுகாடாக மாற்றிய பெருமை மத்திய அரசையே சாரும் இவைமட்டுமின்றி பாலமுனையில் தேசிய முஸ்லிம் தவ்ஹித் ஜமாத் (ஐ.ளு)அமைப்பினரால் ஒத்திகை பார்க்கப்பட்ட மோட்டார் சைக்கில் குண்டு வெடிப்பு ,வவுணதீவு படுகொலை தொடர்பாக காத்தான் குடி பொலிஸ்நிலையத்தில் சரியாக விசாரணை செய்யப்பட்டிருந்தால் உயிர்த்தஞாயிறு படுகொலை நடைபெறுவதற்கான வாய்ப்புக்களே இல்லை.

எனவே மத்தியஅரசு பாரியதொரு இனக்கலவரத்திற்கு தூபமிட்டு அரசியல் இலாபம் தேடுவதற்குரிய முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது. எனவே மத்திய அரசாங்கம் தமிழர்களின் விவகாரத்தில் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வரையும் தமிழக்கட்சிகள்,பிரதிநிதிகள் இனவாத அரசு தொடர்பாக ஏனோதானோ என கை உயர்த்தும் வேலையை நிறுத்திக்; கொள்ள வேண்டும். மாறிமாறி ஆட்சி புரிகின்ற அரசுகளும் இனவாத அரசே.