கிழக்கில் தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியை கண்டித்து , தீர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

கிழக்கு மாகாண ஆளுனரினால் கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப்புதைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது.

 

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் வாயில் கறுப்பு துணி அணிந்தவாறு போராட்டம் நடைபெற்றது.

கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டி புதைக்கும் முயற்சி, கிழக்கு மாகாண ஆளுனரின் ஒருபக்க பார்வையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் மாணவர்களே போன்ற கோசங்களுடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேசசபை, மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பேச்சில் நல்லிணக்கம்,செயலில் இனவாதம், வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்த, தமிழர்களின் கல்வியை புறந்தள்ளும் கிழக்கு ஆளுனர்,அழிக்காதே அழிக்காதே தமிழர்களின் கல்வியை அழிக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பதிலீடுகள் இன்றி இடமாற்றம் வழங்கப்படுவதாகவும் அவற்றினால் தமிழ் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.

 

முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் அதற்கு பதிலீடாக தமிழ் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவேண்டும் எனவும் முஸ்லிம் பிரதேசங்களில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பகுதிக்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கிழக்கு மாகாண தமிழ் மாணவர்களின் கல்வியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியை கோரும் மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது