உங்களுக்கு இந்த நாட்டில் வாழ முடியாது என்று சொன்னால் வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று எங்களிடத்தில் கேட்கின்றார்கள்.

இலங்கையிலுள்ள ஊடகங்கள் தர்மத்தோடு செயற்பட வேண்டுமே தவிர தயவுசெய்து சமூகத்தினை இழிவுபடுத்துவதற்கான வேலைத் திட்டங்களை செய்ய வேண்டாம் என்று விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்டுள்ளார்;.

ஓட்டமாவடி மீராவோடை மஸ்ஜிதுர் ரிழா பள்ளிவாயல் புனரமைப்பு செய்யப்பட்டு தொழுகை நடவடிக்கைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு இன்று உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்-

தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களோ அல்லது வேறு எந்தவொரு ஊடகமாக இருந்தாலும் சரி தர்மத்தோடு பேச தவறுமாக இருந்தால் நிச்சயமாக ஒரு சமூகம் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்குகின்ற ஊடகமாக அது மாற்றப்பட்டு விடும். அவ்வாறு இல்லையாயின் ஊடக தர்மாக இல்லாமல் அது வேறொரு சகாப்புக் கடையாக இருக்கும்.

ஒரு கத்தியைக் கண்டுபிடித்தால் அல்லது பள்ளிவாயலில் கத்திகள் எடுத்தால் அதனை பெரிதுபடுத்தி பூதாகரமாக்குகின்றனர். இந்த நாட்டில் சமையலறையில் பாண் வெட்டும் கத்தியை கூட பயத்தில் பொலிஸாரிடம், வீதியில், ஆற்றில் வீசுகின்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்தி அச்சிமூட்டிய காரணத்தினால் தான்.

இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் தர்மத்தோடு செயற்பட வேண்டும். தயவுசெய்து சமூகத்தினை இழிவுபடுத்துவதற்கான வேலைத் திட்டங்களை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். ஒரு சிறுபான்மை சமூகத்தினை இழிவுபடுத்துகின்ற, அச்சுறுத்துகின்ற, பயப்படுத்துகின்ற பன்மை ஒரு ஊடகம் செய்யக் கூடாது என்பது எங்களது வினயமாக வேண்டுகோளாகும்.

பாராளுமன்றத்தில் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் புதல்வர்கள் எங்களிடத்தில் கேட்கின்றார்கள் உங்களுக்கு இந்த நாட்டில் வாழ முடியாது என்று சொன்னால் வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று கூறுகின்றனர். நாங்கள் எங்கு செல்வது. இதற்கு என்ன பதிலை வழங்க முடியும்.

முஸ்லிம் சமூகத்தில் இருந்து விரல் விட்டு என்னும் அளவிலுள்ள ஒரு சிலர் செய்த இந்த செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் பழியை சுமத்தாமல் சங்கடத்திற்குள் உள்ளாக்காதீர்கள் என்ற செய்தியை பெரும்பான்மை சமூகத்தினரிடம் நாங்கள் சொல்ல வேண்டும் என்றார்.

மீராவோடை மஸ்ஜிதுர் ரிழா பள்ளிவாயல் தலைவர் எம்.எல்.எம்.சபூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், வட்டாரக்குழு உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பள்ளிவாயல் பேஷ்இமாம் மௌலவி ஆதம்லெப்பை அப்துல் ஹமீதினால் தொழுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, நாட்டின் நல்லாசி வேண்டி துவா பிரார்த்தனை இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சரின் கம்பெரலிய திட்டத்தின் பதினைந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பள்ளிவாயல் புனரமைப்பு செய்யப்பட்டு தொழுகை நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.