சமயோசிதமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் நாட்டின் அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு சமயோசிதமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரகால நிலைமை தொடர்பில் புதன்கிழமை (08ம் திகதி) மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச நிறுவனங்கள், பொது இடங்களில் அநாவசியமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படங்கள் எடுத்தல், தொலைபேசிகளில் தேவையற்ற விடயங்களை வைத்திருத்தல் என்பவற்றைத் தவிர்த்து காவற் கடமையில் ஈடுபடுவோர்களினால் வினவப்படும் விடயங்களுக்கு உண்மையான, அவர்களுக்கு சந்தேகம் அற்ற விதத்தில் விடயங்களைத் தெரியப்படுத்தல் போன்ற விடயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
நேற்றைய தினம் நான் கொழும்பில் ஒரு அமைச்சு காரியாலத்தின் முன்னர் வாகனத்தை நிறுத்தி விட்டு அமைச்சுக்குள் சென்ற போது எனது வாகனத்தைச் செலுத்தி வந்தவர் எனது வாகனத்தை உரிய இடத்தில் நிறுத்தி இந்த இடத்தில் இருந்து தொலைபேசியில் புகைப்படம் எடுப்பதற்கான முயற்சிகள் செய்ததாக அங்கு காவற் கடமையில் ஈடுபட்டோர் பொலிசாரிடம் தெரிவித்து அவரை பொலிசார் அழைத்துச் சென்றனர் பின்னர் நான் அவ்விடம் சென்று அவ்விடயத்தைப் பொலிசாரிடம் தெளிவுபடுத்தி வந்தோம்.

 

அதே போன்று சில தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனையில் பட்டறை நடத்தும் ஒருவரிடம் இருந்து கத்திகள் மீட்கப்பட்டதாக ஒருவரைக் கைது செய்தனர். பின்னர் எமது பிரதேசசபை உறுப்பினர் அவ்விடம் சென்று உரிய விடயங்களைத் தெரிவித்து அவரை விடுவித்து அழைத்து வந்தார். இது போன்ற பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சிறு சிறு விடயங்களுக்கு காவற்கடமையில் ஈடுபடுபவர்கள் செயற்படும் விதம் மிகவும் பாராதூரமாக இருக்கின்றது. இவை தொடர்பில் காவற் கடமையில் ஈடுபடுவர்கள் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்துச் செயற்பட வேண்டும்.
அதேபோன்று தமிழ் பேசும் மக்கள் நாட்டின் அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு சமயோசிதமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பிரதிநிகளுக்குத் தெரியப்படுத்தி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடந்து கொள்வது சிறந்தது.

தமிழ் மக்கள் மீது அவநம்பிக்கை கொண்டு செயற்பட்டதன் காரணமாகத்தான் அவர்களின் போராட்டங்களும் அதிகரித்தது. எனவே இப்பாடத்தினைக் கருத்திற் கொண்டு முஸ்லீம் மக்கள் மீது அவநம்பிக்கையுடன் செயற்பட வேண்டாம் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்துள்ளார். அவ்வாறு இருக்ககையில் தற்போது சிறுசிறு விடயங்களில் கூட காவற்கடமையில் ஈடுபடுவோர் நம்பிக்கையற்று செயற்படுவது ஜனாதிபதி கூறிய விடயத்தைக் கருத்தில் எடுக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

மக்களின் உரிமையைப் பேணும் வகையிலும், மேலும் பிரச்சனைகளை உருவாக்காத விதத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதோடு விசாரணைகளை மேற்கொள்ளும் போது பொலிசாரின் நியாயாதிக்கத்திற்கு அமைய பக்கச்சார்பற்ற முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறானவர்களின் கருத்துக்களை காவற் கடமைகளில் ஈடுபடுவோர் கவனத்திற் கொண்டு உண்மைகளைக் கண்டறியும் விதத்தில் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.