மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குள் வெளி வியாபாரிகளை அனுமதிப்பதில்லையென தீர்மானம்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சந்தையில் வெளி இடங்களைச்சேர்ந்த வர்த்தகர்களை தற்காலிகமாக வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லையென்ற தீர்மானம் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையில் இன்று(26) வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் 14வது சபை அமர்வு இன்று(26) வெள்ளிக்கிழமை சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபை அமர்வின் ஆரம்பத்தில், குண்டுத்தாக்குதலின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தும், தந்தை செல்வாவின் 42வது ஆண்டு நிறைவினை நினைவுகூர்ந்தும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் சபை அமர்வின் போது பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதன்போது, அண்மையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலின் காரணமாக நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கின்ற நிலையில், மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியுள்ளது, அதேவேளை வெளியிடங்களில் இருந்து வருகின்றவர்கள் தொடர்பில் சந்தேகிக்கும் நிலை தோன்றியுள்ளமையினை கருத்தில் கொண்டும், வெளியிடங்களில் இருந்து வருகைதருகின்ற வியாபாரிகளின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை சந்தையில் வியாபாரம் செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிப்பதில்லையென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கால்நடைகளை வீடுகளுக்கு சென்று கொள்வனவு செய்யமுடியாது. அவ்வாறு கொள்வனவு செய்வதாயின் பிரதேசசபையின் கண்காணிப்பில் கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள சந்தை வளாகத்தில் வைத்து கால்நடைகளை விற்பனை செய்கின்றவரும், கொள்வனவு செய்கின்றவரும் பிரசன்னமாகி விற்பனை செய்ய முடியும். அவ்வாறே விற்பனை செய்ய வேண்டுமென்ற தீர்மானமும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.