பல்கலைக்கழகங்களினது பரீட்சைகள் இரத்து : பாடசாலை வளாகங்களை சோதனையிட நடவடிக்கை

அனைத்து அரச பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்க நிர்வாகங்களுக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் பல்கலைக்கழகங்களின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படாதபோதிலும் சேவைக்கு சமூகமளிக்க முடியாதவர்கள் விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது,

தேவையேற்படின் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதிகளில் தங்குவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழமைபோன்று வழங்குவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கல்வியமைச்சு அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலைக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின் ஊடாக பாடசாலை வளாகங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை வளாகங்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு மாணவர்களின் பெற்றோருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.