குண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு

கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்களுடன் காணப்பட்ட வேன் ஒன்று பாதுகாப்பு பிரிவினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

இன்று (22) பிற்பகல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த வேனை சோதனையிட்டபோது, அதில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மற்றுமொரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு அது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினால் செயலிழக்கச் செய்யப்படும் வகையில்,  வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த வேன், நேற்றைய தினம் (21) முதன் முதலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்காக தீவிரவாதிகள் வந்த வாகனம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை புறக்கோட்டை, பெஸ்தியன் வீதியிலுள்ள, தனியார் பஸ் தரிப்பிடத்தில் 87 டெட்டனேட்டர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று (22) பிற்பகல் 1.00 மணியளவில், புறக்கோட்டை, பெஸ்தியன் வீதியிலுள்ள, தனியால் பஸ் தரிப்பிடத்தில் கீழே வீழ்ந்து காணப்பட்ட 12 டெட்டனேட்டர்களை, புறக்கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ப்பட்ட மேலதிக சோதனையில் குப்பைமேட்டில் மேலும் 75 டெட்டனேட்டர்கள்  இவ்வாறு மீட்கப்படுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த டெட்டனேட்டர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்பைடயினரால் பரிசீலிக்கப்பட்டு, குற்ற தல பரிசோதனை பிரிவு (SOCO) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, புறக்கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.