பிரதேச பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை

பிரதமர் ரணில் விக்ரம சிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அனைத்து மாவட்ட செயலாளருக்கும் அந்தந்த மாவட்டத்தின் பாதுகாப்பு குழு கூட்டத்தை உடனடியாக நடத்தி பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன இது தொடர்பாக காலி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற காலி மாவட்ட பாதுகாப்புக் குழு கூட்டத்தில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக முடிந்த வரையில் விரைவாக பாதுகாப்பு குழுவை நடத்தி பொலிஸ் முப்படை மற்றும் அரசியல் வாதிகள் மதத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைவாக நேற்றைய தினம் அனைத்து மாவட்டத்தின் பாதுகாப்பு குழுவின் கூட்டம் இடம்பெற்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று பாதுகாப்பு குழு மீண்டும் கூடுகின்றது. மாவட்ட செயலாளர்கள் பாதுகாப்புக் குழுவை கூட்டி தேவையாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி தற்பொழுது அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

காலி மாவட்டத்தின் பாதுகாப்பு குழுவின் கூட்டம் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது. இதில் தென் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதத்தலைவர்கள் முப்படையைச் சேர்ந்த அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.