மட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் .

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அமைந்துள்ள பிறைந்துரைச்சேனை கிராமத்தில் கடந்த வருடம் (2018) காசநோயினால் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் வேகமாக பரவி வரும் காசநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்பணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை பிறைந்துரைச்சேனை கிராமத்தில் இடம் பெற்ற போது அங்கு உரையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

கடந்த வருடம் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் மாத்திரம் காசநோயினால் பதின்மூன்று பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாகவும், இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31ம் திகதி வரை மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதனால் இதில் இருந்து மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு சுகாதார தரப்பினருடன் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது தான் எமது பகுதியில் வேகமாக பரவிவரும் காசநோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமாகி மையன்போடியார் வீதி, ஹ_தா பள்ளிவாயல் வீதி, பன்சலை வீதி, நூரியா வீதியூடாக மீண்டும் அஸ்ஹர் வித்தியாலயத்தை வந்தடைந்தது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் இடம் பெற்ற பேரணியில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், சபை உறுப்பினர்களான எம்.பி.எம்.தையூப், திருமதி.எம்.எல்.நபீரா, மட்டக்களப்பு மார்பு சிகிச்சை நிலைய பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சபாநாதன், கோறளைப்பற்று மத்தி சுகாதார அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் இ.இன்பராஜன், பிறைந்துரைச்சேனை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நஸீர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.