வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு எமது பொறுப்புக்கள் முடிவடைகின்றதா?

 

இன்று எங்கு பார்த்தாலும் வீதி விபத்துக்களும் அதனால் ஏற்படும் மரணங்களுமே முக்கிய செய்திகள். கடந்த ஒரு வாரத்திற்குள் இலங்கையில் 20 இற்கு மேற்பட்ட மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்பட்டுள்ளது.

இதில் அதிகமாக பாதிக்கப்படுவது இளம் வயதினரே. இங்கு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையே எமக்கு பெரிதாக தெரிந்தாலும், விபத்துக்களால் காயமடைந்தவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக அவர்கள் அவைய இழப்புக்களுக்கோ அல்லது கை, கால் செயல் இழந்தோ தமது அன்றாட தேவைகளுக்கு மற்றவர்களின் உதவியில் நீண்ட காலத்திற்கு, ஏன் சில வேளைகளில் உயிர் உள்ளவரைக்கும் தங்கியுள்ள நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் சொற்களால் விவரிக்க முடியாதவை.

பொதுவாக இந்த விபத்துக்கள் மோட்டார் சைக்கிள், வேன் மற்றும் பஸ் என்பவற்றால் ஏற்படுகிறது. இதற்குரிய முக்கிய காரணங்களாக அதிக வேகம், தூக்கமின்மை, போக்குவரத்து விதிகளை மதிக்காமை போன்றவற்றை குறிப்பிடலாம்.

வீதி விபத்துகளை தடுப்பதற்கு சமூகம் சார்ந்த எமது பொறுப்புக்கள்.

முதலில் நாம் போக்குவரத்து விதிகளை மதித்தல் வேண்டும். மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக பயணிப்பதை தவிர்த்தல். குறிப்பாக இளவயதினர் தங்களது சாகசங்களை வீதிகளில் காட்டாமல் இருத்தல் வேண்டும். இதனால் நீங்கள் மட்டுமன்றி மற்றவரின் உயிரையும் ஆபத்துக்கு உட்படுத்துகிறிர்கள்.
குறிப்பாக இருவர் போட்டி போட்டுக் கொண்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும்.

வாகனம் செலுத்தும்போது முற்று முழுதாக கைபேசி பாவனையை தவிர்த்தல். பஸ் அல்லது வேன் சாரதிகள் வாகனம் செலுத்தும்போது கைபேசியை பாவிப்பதை பயணிகள் ஆகிய நாம் கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் எங்களின் உயிர் அவர் கையிலேயே உள்ளது.

ஆசன பட்டியை அணிந்து பயணத்தை மேற்கொள்ளுதல். நாம் பொதுவாக பின்வரிசையில் அமர்ந்திருந்தாலோ அல்லது பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது ஆசன பட்டியை அணிவதில்லை. இதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும். ஏனென்றால் ஆசைப்பட்டி ஆனது உங்களுடையதும் உங்களில் தங்கி உள்ளவர்களினதும் உயிரை பாதுகாக்கும்.

தூர இடங்களுக்கு குடும்பத்துடன் பயணம் செய்யும் பொழுது சாரதியை மிகுந்த கவனத்துடன் தெரிவு செய்ய வேண்டும். இங்கு அவரின் வயது மற்றும் அனுபவம் என்பன கருத்தில் கொள்ளப்பட வேண்டும். சிலவேளைகளில் வேன் சாரதிகள் தொடர்ச்சியாக பயணங்களை மேற்கொள்வதால், அவரின் ஓய்வு பற்றி சற்று அவதானம் செலுத்துதல்.

முக்கியமாக எமது உறவினர் ஒருவரை சாரதியாக தெரிவு செய்வதை முற்றாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவரும் எம்முடன் சுற்றுலாவை கழிப்பதால் சாரதிக்கு போதுமான ஓய்வும் கிடைப்பதில்லை.

இயலுமானவரை சாரதி தங்கி ஓய்வு எடுப்பதற்கு பொருத்தமான வசதிகளை செய்து கொடுத்தல் வேண்டும். மேலும் எமது பயணங்களை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பயணத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் சாரதியை களைப்படையச் செய்யும்.

பொதுவாக வீதி விபத்துக்கள் அதிகாலையிலேயே நடப்பதால், அதிகாலை ஆவதற்கு முதல் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லக் கூடியதாக எமது பயணங்களை திட்டமிட வேண்டும்.
இயலுமானவரை ஒருவர் சாரதியுடன் கதைத்துக்கொண்டு பயணம் செய்வதால் சாரதியின் தூக்கத்தை கலைக்கலாம்.

சாரதி எந்த நேரத்திலும் பயணத்தின் போது மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீண்ட பிரயாணங்களின் பொழுது, புதிதாக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற எமது குடும்ப அங்கத்தவர் ஒருவர் வாகனம் செலுத்தி பார்ப்பதை தவிர்த்தல்.

போக்குவரத்து விதிகளை மீறி போலீசாரிடம் பிடிபடும் பொழுது அதற்குரிய தண்ட பணத்தை முறையாக செலுத்துதல் வேண்டும். ஏனென்றால் நாம் ஒரு முறை தவறு செய்து தண்டம் செலுத்தும் பொழுது மீண்டும் அந்த தவறை செய்யாமல் விடுகிறோம். இங்கு போலீசாருக்கு நாங்கள் இலஞ்சம் கொடுக்கும் போது நாம் எமக்கும், எமது சமூகத்திற்கும் பாரியதொரு பிழையை செய்கிறோம்.

எனவே இனிமேலாவது தண்ட பணத்தை சரியாக செலுத்துவோம்.

வீதி விபத்துக்களை இயன்றளவு தடுத்து வளமானதொரு சமுதாயத்தை உருவாக்க உறுதியுரை கொள்வோம்!!

Dr. விஷ்ணு சிவபாதம்
MBBS, DCH, MD Paediatrics
குழந்தை நல வைத்திய நிபுணர்