பாசிக்குடா கடற்கரையில் நகை கண்டெடுப்பு : கல்குடா பொலிசாரின் நேர்மைக்கு மக்கள் பாராட்டு

கல்முனை 191, மாலிகா வீதியில் வசித்து வரும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை செவ்வாய்கிழமை  பாசிக்குடா கடற்கரைக்கு நீராடுவதற்காக வருகை தந்திருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் தாம் அணிந்திருந்த நகைகளை கழட்டி ஒரு சிறிய கைக்குட்டையில் வைத்து விட்டு நீராடியுள்ளனர். துரதிஷ்டவசமாக அது காணாமல் போயுள்ளது.
தமது நகைகள் காணாமல் போயுள்ள கவலையில் அக்குடும்பத்தினர் கடற்கரையில் அங்குமிங்கும் தேடி அலைய ஆரம்பித்துள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான அந்த நகைகளை பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாசிக்குடா உயிர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினர் கண்டெடுத்துள்ளனர்.
நகையின் சொந்தக்காரரின் அடையாளங்களை ஊர்ஜிதம் செய்த பின்னர் கல்குடா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக பாசிக்குடா சுற்றுலா வலயத்திற்குப் பொறுப்பான உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். பாஹிம் உள்ளிட்ட அவரது பொலிஸ் குழுவினரால் மீண்டும் உரிமையாளரிடம் நகைகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நகைகளை இழந்த குடும்பத்தினர்,
சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் கல்குடா பொலிசாரின் நேர்மையான பொறுப்புமிக்க இச்செயற்பாட்டினையும், சேவையையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.