எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலேயே இவ்வாறு இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த பிரதேசங்களில் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் 100 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மழையுடனான வானிலையின் போது மன்னாரிலிருந்து மட்டக்களப்பு வழியாக புத்தளம், காலி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய கடற்பிரதேசங்களில் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்படும்.

அத்தோடு காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 15 தொடக்கம் 25 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும். எனவே இதன் போது மீன்பிடி தொழிலுக்குச் செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை நாட்டின் ஏனைய சில பிரதேசங்களில் இன்றும், நாளையும் தொடர்ந்தும் வெப்ப காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வட- மத்திய மாகாணத்திலும், மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் அதிக வெப்பநிலை நிலவும்.

கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுமார் 21 மாவட்டங்களில் நிலவும் வரட்சியான காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை விட அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 950 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 80 ஆயிரத்து 704 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதோடு, குருணாகல் மாவட்டத்தில் மரணமொன்றும் பதிவாகியுள்ளது.