வரவு, செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் வீட்டுத்திட்டங்களையும் பெற முடியாத நிலையை அடைந்திருப்போம்.

வரவு, செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் வீட்டுத்திட்டங்களையும் பெற முடியாத நிலையை அடைந்திருப்போம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் புதிய கிராமங்கள் எனும் தொனிப்பொருளில், தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் உதவியுடன் வீடமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று(08) திங்கட்கிழமை நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த செயற்பாடுகளினால்தான் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது, பலரின் எண்ணங்களும் சிறதடிப்பட்டன. நாட்டில் நடைபெற்ற 52நாள் அரசியல் சதிட்டம் முறியடிக்கப்பட்டது. அப்போதைய காலச்சூழலில்தான் வீடமைப்பு நிர்மாணத்துறையின் அமைச்சராக கூட விமல்வீரவன்சவை தெரிவுசெய்திருந்தனர். அது தொடர்ந்திருந்தால், இன்று இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்காது. தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவு, செலவுத்திட்டத்திற்கு வாக்களித்தமைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். வரவு,செலவு திட்டம் தோற்கடிப்பட்டிருந்தால் இவ்வீட்டுத்திட்டங்கள் அமைப்பட்டிருக்காது. தேர்தல்லொன்றுக்கு செல்லவேண்டிய நிலையேற்பட்டிருக்கும். இன்று குற்றவாளிகளாக இருக்கின்றவர்கள் கதாநாயகர்களாக மாறியிருப்பர். முன்னைய ஆட்சிக்காலம் போன்று அட்டகாசம் செய்யலாம் எனவும் நினைக்கின்றனர். 52நாட்களில், பழைய நிலை வந்துவிட்டதோ என பலரும் எண்ணினர். ஊடங்களும் கூட அஞ்சந்தொடங்கின.

நாட்டில் கம்பரெலிய, கிராமசக்தி போன்றவற்றின் ஊடாகவும், வடக்கு, கிழக்கு செயலணி ஊடாகவும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. நாட்டில் எல்லாப்பிரச்சினைகளும் முடிந்துவிடவில்லை. அரசியல் கைதிகள் சிறைகளிலே இன்றும் இருந்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக 109பேர் அரசியல் கைதிகளாக உள்ளனர். காணிகள் விடுவிப்பும் முற்றாக நிறைவுபெறவில்லை. ஆனாலும் தற்போதும் விடுவிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சிகாலத்தினை விட இவ்வாட்சியின் தன்மையை மதிப்பிடுகின்ற போது, இவ்வாட்சிக்காரர்களுக்கே அதிக மதிப்பெண்களை இடமுடியும். அவ்வகையில்தான் இரண்டையும் மதிப்பிட்டு வரவு, செலவு திட்டத்திற்கு வாக்களித்துள்ளோம். இதனால் பலசில நன்மைகளும் நமக்கு கிடைக்கப்பெறவிருக்கின்றன.

எமது பிரதேச எல்லைகளை பிறர் பிடிக்கின்றனர், உள்நுழைகின்றனர் என்று கூறிவருகின்றோம். இன்னோர் பக்கமாக எமது எல்லைகளை விட்டு நாம் மையப்பகுதியை நோக்கி நகர்கின்றோம். இதனால் எல்லைப்பகுதிகள் கைவிடப்படுகின்றன. அவற்றில் யாரோ வருகைதந்து குடியேறுகின்றனர். எமது பகுதியை தக்கவைக்க வேண்டுமாகவிருந்தால் நாம் இருந்த எல்லைகளில் நாமே இருக்க வேண்டும். கோட்பாட்டு ரீதியாக பேசுவதைவிடுத்து அனைவரும் செயற்பாட்டு வடிவில் மாறவேண்டும்.
மக்கள் நினைத்ததால் எதனையும் சாதிக்கலாம். இப்பிரதேசத்தில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தி நடைபெறுவதாக அறிகின்றோம். கடந்த காலங்களில் இதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருந்ததாக அறிந்தும். இப்போது, பொலிஸார் சிறப்பாக செயற்படுகின்றனர். செயற்படுவர் என நம்புகின்றோம். கசிப்பு உற்பத்தி செய்வது மிகவும் தவறு, அதற்கு உடந்தையாகவிருப்பதும் அதைவிடத்தவறு. இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றால் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்க வேண்டும். சாராயம் உற்பத்தி செய்கின்ற போது, எதனை எந்த அளவில் இடவேண்டுமென்ற சூத்திரமுள்ளது. ஆனால் வடிசாராய உற்பத்திற்கு அவ்வாறான எந்த சூத்திரங்களும் இல்லை. இதனால் அதிக பாதிப்புக்கள் உள்ளன. இதன்மூலம் எமது இனத்தினை நாமே அழிக்கின்ற செயற்பாடாக மாறிவிடும். இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக நிறுத்த வேண்டும். இதற்கு மக்கள் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்றார்.