வடக்கு பிரதேச செயலகம் சட்ட விரோத அலுவலகம் என்று என்னால் கூற முடியும்-நஸீர் ஹாஜி

(க.கிஷாந்தன்)

கல்முனையில் தமிழ்பேசும் மக்களிடையே  ஒற்றுமையை வலுப்படுத்தவே அன்றி  இனரீதியான  எந்தவொரு பிளவுபடுத்தும் நோக்கமும் கிடையாது என  கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜி குறிப்பிட்டார்.

சம்மாந்துறை தனியார் நிலையம் ஒன்றில் கல்முனையில் இயங்கி வரும் பிரதேச செயலகம் தொடர்பிலான விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது கருத்தில்

எமது  ஊடக மாநாட்டை  கல்முனையில் நடாத்துவதற்கு பொலிசார் தடைவிதித்துள்ளனர் .இதனை தடையை முன்னின்று செயற்படுத்தியவர்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் அனைத்து மத தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் சிலர் தான் காரணம். இவர்கள்   பொலிஸாரை திசை திருப்பி  கல்முனையில் நடாத்தப்பட இருந்த ஊடக மாநாட்டை குழப்பும் நோக்கில்  இனங்களுக்கு இடையே நல்லுறவை பாதிக்கும் ஊடக மாநாடு என  பொலிஸ் முறைப்பாடு செய்ததன்  மூலம் அது  தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.ஆனால் மேற்படி நபர்கள் இதில் எந்த நோக்கத்திற்காக இவ்வாறான இன முரண்பாடு என்ற சொல்லை கூறி தெரிவித்தார்களோ என்பது புரியாத புதிராக உள்ளது.

ஆனால் கல்முனை  வடக்கு பிரதேச செயலகம் சட்ட விரோத அலுவலகம் என்றும் என்னால் கூற முடியும்.அதே வேளை  கல்முனையில் வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்று இல்லை என்பதையும் தெளிவாக கூற முடியும்.ஆனால் அதனை தெளிவு படுத்துவதற்கு முயன்றேனே அன்றி  இனங்களுக்கு இடையில் இன நல்லுறவை பாதிக்கும் வகையில்  அந்த விடயத்தை நான் குழப்புவதற்கு  ஊடக மாநாடு ஒன்று நடாத்த  மனட்சாட்சிக்கு அப்பால் முடியாது என நினைக்கின்றேன்.எதிர்காலத்தில் கல்முனை பகுதியில் இன நல்லுறவை பாதிக்கும் வகையில் இவ்வாறான பிரித்தாளும் நிலைமையினை ஏற்படுத்த கூடாது என்பதை தெளிவுபடுத்தி அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவே இந்ந மாநாட்டை கூட்டி வலியுறுத்தவே முயன்றேன் என்பதை கூற விரும்புகின்றேன்.

அத்துடன் இங்கு உள்ள பௌத்த தேரர் ஒருவரே தமிழ் முஸ்லீம் மக்களை பிரிக்கும் முயற்சியில் முன்னின்று செயற்படுகிறார்.அவரே சில தமிழ் சகோதரர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்.ஆனால் நாங்கள் சமூகத்தை ஐக்கியப்படுத்தவே பாடுபடுகின்றோம்.எனவே இந்த பிரதேச செயலக விடயத்தில் ஒற்றுமையுடன் தமிழ் பேசும் மக்களாக தொடர்ந்து செயற்படுவோம் என குறிப்பிட்டார்.