2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

ஐக்கிய தேசிய முன்னணியின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர்  பாராளுமன்றில் இடம்பெற்றது.

 

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம்  45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் வெற்றிபெற்றது.

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணியின் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  13 உறுப்பினர்களும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன்  இலங்கை தொழிலார் காங்கிரஸ் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை கடந்த ஆண்டு சமர்ப்பிக்க முடியாத நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்கால வரவு செலவு திட்டம் ஒன்றினை அரசாங்கம் முன்வைத்தது.

இவ் இடைக்கால கணக்கறிக்கையில் இந்த ஆண்டு  முதல் நான்கு மாதங்களுக்காக 1765 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

இதில் சேவைகளுக்காக 790 பில்லியன் ரூபாவும், திரட்டு நிதியத்துக்காக 970 பில்லிய் ரூபாவும், முற்பணங்களுக்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் முழுமையான தீர்மானத்தில் கடந்த மார்ச் மாதம்  5 ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்டது.

அன்று தொடக்கம் இன்றுவரை ஒரு மாதகாலம் தொடர்ச்சியாக விவாதம் நடத்தப்பட்டதுடன் கடந்த மாதம் 28 ஆம் திகதி எதிர்கட்சியின் ஆதிக்கத்தில் மேல்மாகாண நகர அபிவிருத்தி மற்றும் மாநகர அமைச்சு, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுக்கள் தோற்கடிக்கப்பட்டன.

இம்முறை வரவு-செலவு திட்டத்தில்  445000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் கடன் பெறக்கூடிய தொகை 216000 கோடி ரூபாவாகும்.  இந்நிலையில் வரவு -செலவு திட்டத்தில் இறுதி வாக்கெடுப்பு இன்று நிதி அமைச்சின் விவாதத்தின் பின்னர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.