தயவுசெய்து திரும்பிப் பாருங்கள் சம்பந்தனை நோக்கி ஆனந்தசங்கரி எழுதியது

தங்களுடனும், எமது மக்களுடனும் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் சார்பாக எனது கருத்தைத் தெரிவிக்காது அமைதியாக இருந்துள்ளேன். ஆனால் இதை அவசர அவசரமாக எழுதும் நோக்கம் எமது மக்களை நேரடியாகப் பாதிப்பதால் உங்கள் கௌரவத்தைக் காப்பாற்றுமாறு ஆலோசனை வழங்குவதற்காகவே!

நாம் இருவருக்கும் பலவிடயங்களில் பொதுவானதாக இருப்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நாம் ஒரே இனத்தைச் சேர்ந்த ஒரே மொழியைப் பேசுகின்ற இந்து மதத்தைப் பின்பற்றுகின்ற ஒரே அரசியற்கட்சியில் இருந்தவர்களாவோம். நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினராவேன். ஆனால் நீங்கள் அதில் 1977ஆம் ஆண்டுதான் இணைந்து கொண்டீர்கள்! இந்த வருடம் அக் கட்சியில் எனது 49ஆவது வருடமாகும். ஆனால் நீங்கள் பொறுத்த நேரத்தில் 2004ம் ஆண்டு எமது கட்சியை உதறித் தள்ளிவிட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்! நான் அறிந்த வகையில் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்ததிலிருந்து தமிழரசுக் கட்சி ஏறக்குறைய செயலற்றிருந்தது. திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் கூற்றுப்படி தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக செயற்பட்ட அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் முற்றுமுழுதாக அகிம்சையை கடைப்பிடித்துவந்த ஒரு அரசியற்கட்சியின் பெயரையும் சின்னமாகிய வீட்டையும் எவரேனும் தப்பாக பிரயோகிக்க வாய்ப்பளியாது பாதுகாப்பதற்காக அந்தக் கட்சியை தொடர்ந்தும் பதிவில் வைத்துக்கொண்டார் எனக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் சார்பாக தர்மரத்தினம் சிவராம் என்பவர் தராகி என்ற புனைபெயரில் பிரபல்யமான எழுத்தாளர். தமிழரசுக் கட்சியின் பதிவு வெறும் பேப்பரில்தான் என தெளிவாக கூறியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியை விடுதலைப் புலிகளின் ஓர் அங்கமாக்க நீங்கள் எடுத்த முயற்சி பற்றி நான் அறிவேன். அதனாலேயே சகல வேட்பாளர்களும் புலி உறுப்பினர்களாக நியமிப்போம் என ஆலோசனை வழங்கினேன். விடுதலைப் புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்ப வாய்ப்பாக இருக்கும் என நான் கருதினேன். இந்த ஆலோசனையை ஏற்காத நீங்கள் எவருக்கும் தெரியப்படுத்தாது, திடீரென கட்சியை விட்டு விலகிப் போய் சுத்துமாத்து செய்து தமிழரசுக் கட்சியை திரு. மாவை. சேனாதிராசா வெறும் பேப்பரில் பதிந்து வைத்த வீட்டுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்தீர்கள். நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு மறுபக்கம் இருந்த ஊடகவியலாளரிடம் நியமனப்பத்திரம் விடுதலைப்புலிகளின் சார்பில் கையளிக்கப்பட்டதென பகிரங்கமாக கூறினீர்கள்.

அதனைத் தொடர்ந்து தங்களின் குழுவொன்று வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் முழுப் பங்களிப்புடன் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும் அவர்கள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும் உள்ளடக்கி தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்து உலகின் மூலை முடுக்குகளில் இருந்துகொண்டு நான் உதயசூரியன் சின்னத்தை கொண்டு ஓடிவிட்டேன் என்று சிலர் புலம்பினார்கள். உதயசூரியன் சின்னத்தை குழிதோண்டி புதைக்க முயற்சித்தவர் யாரென இன்று அனைவரும் அறிவர்.
2004 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் எவ்வாறு 22 ஆசனங்களை கைப்பறிறினீர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்! திரு. மாவை சேனாதிராசா காலையில் தோற்று மாலையில் வெற்றி பெற்றார் என்பதும் இன்னொரு வேட்பாளர் இலங்கையில் என்றும் நடவாதவாறு 1,15,000 வாக்குகளைப் பெற்றிருந்தார். மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் எதுவித பிரச்சாரத்திலும் ஈடுபட அனுமதிக்கப்பட வில்லை. பத்திரிகை விளம்பரங்கள் உட்பட. இத்தனை செலவினங்களுடன் தெரிவான 22 உறுப்பினர்களும் 6 ஆண்டுகள் சகல பதவிகளையும், சலுகைகளையும் அனுபவித்தனர். உங்களுடைய தேர்வும் ஏனையவர்களின் தேர்வும் மோசடி மூலமானதாகும்.
பாராளுமன்றப்படியை தாண்டும் தார்மீக உரிமை தகுதி கூட உங்களுக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் சார்பிலே நியமனப் பத்திரம் தாக்கல் செய்தீர்களென அத்தேர்தலில் வெற்றியடைந்த நீங்கள் அனைவரும் புலிகளாக கணிக்கப்பட வேண்டும் அல்லவா? 2004 ஆம் ஆண்டு தேர்தலில் அனைவரும் ஒரே கடசியில் ஒரே சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயராக இருந்தனர். இதைத் திட்டமிட்டு விடுதலைப் புலிகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதை தடைசெய்துள்ளீர்கள். பல நாட்கள் முயற்சிசெய்து சகல கட்சியினரையும் ஓரே கொடியின்கீழ் கொண்டுவர முயற்சி எடுத்தவர்கள் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் எடுத்த முயற்சி பெருமுயற்சியாகும். நீங்கள் எடுத்த புத்திசாதுரியமற்ற முடிவால் யுத்தம் 2004ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். அது 2009 வரை மேலும் நீடிக்க வைத்தது நீங்களே! மொத்தத்தில் என்ன நடந்தது? பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்ததுடன் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனமாயினர்.
உங்களுக்கு இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தார்மீக உரிமை உண்டா என கூற முடியுமா? ஏனது அபிப்பிராயப்படி உங்களுக்கு நன்கொடையாகவோ வேறு ஏதாவது வழியிலோ தரப்படும் சலுகைகளின் பெறுமதியை எதிர்காலத்தில் கடும்போக்காளர்கள் ஆட்சியைக் கைப்பற்றும்பட்சத்தில் முழுத்தொகையையும் அறவிட வேண்டிய நிலை ஏற்படலாம். நீங்கள் உங்களுடைய கௌரவத்தில் எஞ்சியுள்ளவற்றையாவது காப்பாற்ற வேண்டுமானால் தயவுசெய்து அமைச்சரவை அளித்த எந்த சன்மானத்தையும் கைநீட்டி வாங்காதீர்கள்! அது மக்களின் அபிப்பிராயப்படி நியாயமற்ற தேவையற்ற முட்டாள்தனமானதுமாகும்.

அன்புடன்,

வீ. ஆனந்தசங்கரி,