விடுதலைப்புலிகள் சுமந்திரன் பதில் சொல்லியாகவேண்டும் மட்டில் தயாசிறி.

(க. விஜயரெத்தினம்)
பொதுமக்களை விடுதலைப்புலிகளுடன் பணயக்கைதிகளாக ஒன்றாக வைத்திருந்தற்கு விசாரணைகள் நடாத்தப்பட்டால் சுமந்திரன் பதில் சொல்லியாக வேண்டுமென தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு.

மூன்று இலட்சம் தமிழ்மக்களை முள்ளிவாய்க்காலில் அன்று விடுதலைப்புலிகள் கைதிகளாக வைத்திருந்தார்கள்.தமிழ்மக்களை ஒன்றாக கைதிகளாக வைத்திருப்பதற்கு தமிழ்த்தலைவர்களே காரணமாகும்.மூன்று இலட்சம் தமிழ்மக்களை கைதிகளாக வைத்திருந்தற்கு சுமந்திரன் தலைமையிலான தமிழ்த்தலைவர்கள் விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டிவருமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்  பிரதான காரியாலயம்  திங்கட்கிழமை(1.4.2019) பிற்பகல் 2.00 மணியளவில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச தலைவர் ஹரிதரன் கிரி தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு-திருமலை வீதியில்,இல. 570,மட்டக்களப்பு (கிரிபோஜன் உணவகத்திற்கு அருகாமையில்)திங்கட்கிழமை  பிற்பகல்  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சுதந்திரக்கட்சியின் மறுசீரமைப்பு மாநாடு மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில்  பிற்பகல்3.00 மணியளவில் நடைபெற்றபோது இதில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-கிழக்கு மாகாணம் தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்கள் வாழும் பிரதேசமாகும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமானவர்கள் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.இஸ்லாமிய சகோதரர்களும் வாழ்கின்றார்கள்.எல்லா மக்களும் ஒன்றிணைந்து இலங்கையில் சுதந்திரக்கட்சியை எவ்வாறு பாதுகாக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கின்றோம்.

இவ்வளவு காலமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தமிழ்தலைவர்கள்,முஸ்லிம் தலைவர்கள் உருவாக்காமல் தனித்து செயற்பட்டது.கட்சியை வாடகைக்கு விட்டுத்தான் வளர்த்தோம்.ஆட்சியமைக்கும்போது தமிழ்த்தலைவர்களையும்,முஸ்லிம் தலைவர்களையும் ஒதுக்கி வைத்துதான் ஆட்சியமைத்தோம்.

நல்ல தமிழ்தலைவர்களையும்,முஸ்லிம் தலைவர்களையும் உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களை பாராளுமன்றம் வரை அழைத்துச் செல்லவுள்ளோம்.ஆகையால் நாங்கள் மற்றவர்களின் விளக்கிலே வெளிச்சத்தை பார்க்க வேண்டியதில்லை.

இவ்வளவு காலமும் தமிழ்த்தலைவர்கள் மட்டக்களப்பு மக்களுக்கு வேலை செய்யாமல் தங்களுக்காகவும்,தங்களின் குடும்பத்திற்காகவும் வேலை செய்துள்ளார்கள்.அதாவது கிழக்கு மாகாண மக்களின் கண்ணீரையும்,வேதனையையும் வைத்து தமிழ்தலைவர்கள் அதனை பாராளுமன்றத்திலே பாவித்து தங்களையும்,தங்களின் குடும்பத்தையும் வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.ஆனால் எமது கட்சியானது ஜாதி,மதம்,மொழி இல்லாமல் கட்சி வளர்க்கப்படுகின்றது.இது பக்கசார்பான கட்சியல்ல.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நாட்டிலுள்ள அனைத்து அனைத்தின மக்களுக்கும் ஜனாதிபதியாகவும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும்,இருந்து பாதுகாத்து வருகின்றார்.எங்களுடன் இணைந்து வேலை செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் முன்வாருங்கள்.

இன்றைய நிகழ்வுகளுக்கு மின்சாரம் இல்லாமல் போனதால் பட்ட கஸ்டம் வேதனை தெரியும்.கடந்த நான்கரை வருடங்களில் இந்த அரசாங்கத்தினால் மின்உற்பத்தி நிலையத்தையும் அமைக்க முடியாமல் போயுள்ளது.ஒரு மின்சாரக்கூற்றையும்,மின்சாரத் தொகுதியையும் இந்த அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்க முடியாமல் போயுள்ளது.

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சலுகை அடிப்படையில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மின்சாரத்தை வெட்டப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்.ஆனால் புத்தாண்டுக்கு பிற்பாடு நாடு பூராகவும் 12மணித்தியாலயம் மின்சாரம் தடைப்படவுள்ளது.மின்சாரம் வெட்டப்படுவதற்கான முழுமையான தீர்வு அல்லது பதில் இந்த அரசாங்கத்தால் இதுவரையும் முன்னெடுக்கவில்லை.அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் கட்சிகளும் மின்சாரப்பிரச்சனைக்கு பதில் இல்லாமல் உள்ளது.

தமிழ்மக்களின் மரணச்சான்றீதழ்களை வைத்து தமிழ்கட்சிகள் பணம் சம்பாதிக்கின்றார்கள்.வடகிழக்கிலே கடந்த யுத்தத்தினால் தமிழ்மக்கள் அழிந்துள்ளார்கள்.இவர்கள் மரணித்தத்துக்காக சிங்களமக்கள் சார்பாக நான் மன்னிப்பு கோருகின்றேன்.தமிழ்மக்களின் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்கட்சிகள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்மக்களின் ஏகபிரநிதிகளாக தமிழ்கட்சிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 3000மக்கள் சிக்கிக்கொண்டபோது தமிழ்கட்சிகள் வாய்மூடி மௌனிகளாக காணப்பட்டு பதில் சொல்லவில்லை.மூன்று இலட்சம் பொதுமக்களை அன்று விடுதலைப்புலிகள் பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள்.பொதுமக்களை விடுதலைப்புலிகளுடன் பணயக்கைதிகளாக ஒன்றாக வைத்திருப்பதற்கு தமிழ்த்தலைவர்களே காரணமாகும்.ஆனால் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் சுமந்திரன் பதில் சொல்லியாகவேண்டும் எனத்தெரிவித்தார்