கிழக்கை பாதுகாக்க தமிழ்கட்சிகள் ஒன்றிணைவோம்.

தமிழ்த் தேசியத்தின் நலனுக்காகவும், இருப்புக்காகவும் தமிழ் பிரதிநிதித்தவத்தை பாதுகாக்கவும்  இடையறாது உழைக்கின்ற தமிழ் கட்சிகள், நலன்விரும்பிகள் யாவரும் கிழக்கு மாகாணத்தின் காலத்தின் தேவை கருதி தேர்தலில் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என மு.கிழக்குமாகாண சபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த இரா.துரைரெத்தினம் ,
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் சரி பிழை என்பவற்றுக்கு அப்பால் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வர முடியும். ஆனால் கிழக்கின் அரசியல் கள நிலவரம் வேறு. தமிழர்கள் பல கோணங்களில் பிரிந்து நின்று  போட்டியிடும் பட்சத்தில் குறிப்பிட்ட தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதோடு,மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் இலகுவான முறையில் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இந்த யதார்த்த நிலையை அனைத்து தமிழ் கட்சிகளின் தலைமைகளும், பிரதிநிதிகளும் உணர்ந்து பயணிக்க வேண்டிய கடப்பாடுகளும், பொறுப்புக்களும் உண்டு.
குறிப்பாக, கிழக்கு மாகாணசபையின்  நிருவாகத்திற்கு கட்டுப்பட்ட மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மூன்று மாவட்டங்களிலும் மூன்று இன மக்களையும் உள்ளடக்கிய  தமிழர்கள் 40வீதம், முஸ்லிம்கள் 37வீதம், சிங்களவர்கள் 23வீதம்  இவ் விகிதாசாரத்தின் வாக்காளர்கள் வாக்களிக்கும் விகிதத்திற்கு ஏற்றவாறு 37 பிரதிநிதிகள் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். அண்ணளவாக, இதில் 09சிங்களம், 13தமிழ், 15முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதோடு,  தமிழ் மக்களைப் பொறுத்தவரையில்   40வீதமான விகிதாசாரத்தில், 20வீதம் விகிதார அடிப்படையிலேயே வாக்களிப்பதால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுகின்றன. இவைமட்டுமின்றி கட்சிகள் பிரிந்து
தேர்தல்களில் போட்டியி;டும் பட்சத்தில் இன்னும் ஒருசில தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதோடு, இன்னும் சிலர் தேசியக்கட்சிகளில் போட்டியிடும் பட்சத்தில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் ஏனைய சமூகத்தவர்களுக்கு சென்று விடும்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் கடந்த கால மாகாணசபைத் தேர்தல்களில் மாவட்ட ரீதியாக 35வீதம் தொடக்கம் 55 வீதத்திற்கு உட்பட்ட வாக்காளர்களே 1989ம் ஆண்டு, 2008ம்ஆண்டு, 2012ம் ஆண்டு மாகாணசபை தேர்தல்களில் வாக்களிக்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழர்களைப் பொறுத்தவரையில்  மாகாணசபை ஊடாக, செயற் படுத்தப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாக கட்சித் தலைமைகள் கடந்த காலங்களில் அக்கறை காட்டியதில்லை. காரணம் புதியதொரு தீர்வுத் திட்டத்தை நோக்கி கட்சித்
தலைமைகள் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதால் அக்கறை காட்டுவதில்லை அது மட்டுமின்றி பல தலைமைகள் மாகாணசபை முறமைகளை ஏற்றுக் கொள்வதுமில்லை.
இதன் காரணமாக இக் கால கட்டங்களில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சராகவும், மாகாணசபையின் அமைச்சராகவும் தெரிவு செய்யப்படும் ஏனைய சமூகபிரதிநிதிகள் சுகாதாரத்துறை, உள்ள+ராட்சி, நகரஅபிவிருத்தி,  நீர்பாசனம், காணிகள்,புதிய நியமனங்கள், பதவி உயர்வுகள், கல்வி அலுவலகங்கள், பிரதேசசெயலகம்,குடிநீர் திணைக்களம் இது போன்ற இன்னும் பல வேலைகளில் மத்திய அரசின் உடந்தையுடன் சில அமைச்சர்கள் கடந்த காலங்களில் மிகவும் மோசமான முறையில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு துரோகம் விளைவித்தது வரலாறாகும்.
தமிழர்கள் மாகாணசபையைப் பொறுத்தவரையில் மத்திய அரசிடமிருந்து நிதி அதிகமாக ஓதுக்கப்பட வேண்டும். மாகாணசபையை அதிகாரம் உள்ளதாக மாற்றுவதற்கு செயற் திட்டங்கள் தீட்ட வேண்டும், நியதிச்சட்டங்கள், உபவிதிகள் உருவாக்கப்பட வேண்டும், மத்திய,மாகாண அரசுக்கிடையில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிய வேண்டும்,  விகிதாசாரங்களா? திறமைகளா? தொடர்பான விடயங்கள், வறுமையை முன்னோக்கிய நிதி ஓதுக்கீடு, மாகாண ஆளனி தொடர்பான மீள்பரிசீலனை, மத்திய அரசினால் கபளீகரம் செய்யப்படுகின்ற வரிஅறவீடு, வழங்கப்பட்ட அதிகாரத்தை அமுல்படுத்துதல், போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக அக்கறை செலுத்தாமல் புதிய தீர்வுத் திட்டம் தொடர்பாக அக்கறை செலுத்தி கிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரத்தை தமிழர்களாகிய நாங்கள் பலவீனமாக பயன்படுத்தியதே. மாகாணசபையில் இருந்து கொண்டு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்தியிலும்,மாகாணத்திலும் பல வேலைதிட்டங்களை செயற்படுத்த முடியும்.
எனவே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரத்தை கிழக்கு மாகாணதத்pல் பெற்றுக் கொண்டு அதை விருப்பத்துடன் தமிழ்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதிநிதிகளை அதிகரிக்க வைக்க வேண்டும்.
ஒரு சின்னத்தின் கீழ் பிரதிநிதிகளை அதிகமாக பெற்றுக் கொள்வதன் ஊடாகவே அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தமிழர் ஒருவரை முதலமைச்சராக கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வருவதற்கு தேசியக் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு கிழக்கு மாகாணத்தில்  செயல்படுகின்ற மக்கள் நலன்சார்ந்த அமைப்புக் களுடனும் குறிப்பாக. அரசியற் கட்சிகளான
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி , தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழ் ஈழ மக்கள்விடுதலைக்கழகம் ,தமிழ்ஈழவிடுதலை இயக்கம் , இலங்கை தமிழரசுக்கட்சி  ,    தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் , ஈழவர்புரட்சிகர ஜனநாயக முன்னணி, தமிழ்மக்கள் கூட்டணி ,  தமிழர் விடுதலைக் கூட்டணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி , தமிழர்கட்சி  போன்ற கட்சிகளுடன் தேர்தல் தொடர்பான கூட்டு விடயத்தில் பேசி உடன்பாட்டுக்கு வருவது பேரம் பேசுவதற்கு ஆரோக்கியமாக அமையும். இவ்விடயத்தில் அனேகமான கட்சிகளுக்கு வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தலைமையில் இருப்பதால் இவ்விடயத்தில் கிழக்கின் தமிழ் பிரதி நிதித்தவத்தைப் பாதுகாக்க வழிவகை செய்வார்கள் என கிழக்கு வாழ் மக்கள் நம்புகின்றார்கள்
எமது கிழக்கு வாழ் தமிழ் மக்களின் எண்ணங்கள், அபிலாசைகள் ஏராளம் உண்டு. இவற்றை நிறைவேற்ற வேண்டுமாயின் யாவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டியது அவசியமாகும். ஒரு கையால் மட்டும் ஒசை எழுப்ப முடியாது. இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டுமே ஓசை எழுப்ப முடியும். ஆகவே நாம் ஒன்று இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.