மண்முனை தென்மேற்கு பிரதேச விளையாட்டு விழா

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளின் இறுதிநிகழ்வுகள் இன்று(28) வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இறுதிவிளையாட்டு நிகழ்வில், ஆண், பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டம், மரதன் ஓட்டம், தோணியோட்டம், உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டி போன்றன இன்று இடம்பெற்றன.

இறுதியாக நடைபெற்ற உதைப்பந்தாட்டப்போட்டியில், அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகமும், கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகமும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடிய நிலையில், கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா 2கோள்களையும், அரசடித்தீவு விக்னேஸ்வரா 1கோள்களையும் இட்டு, கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பிரதேசத்திற்கான உதைபந்தாட்ட கிண்ணத்தினை சுபீகரித்துக்கொண்டது.

பிரதேசத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும், பங்கேற்று அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக்கழகம் 16தங்கப் பதக்கத்தினையும், 17வெள்ளிப் பதக்கத்தையும், 08வெங்கலப் பதப்பத்தினையும் பெற்று பிரதேசத்தில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது. அதேபோன்று கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் 11தங்கம், 09வெள்ளி, 08வெங்கலப் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது.
போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீர, வீராங்கணைகளுக்கு பரிசில்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய இறுதிநிகழ்வில், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் உள்ளிட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.