கிழக்கிற்கு மேலும் இரு புதிய கல்வி வலயங்கள்.

கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக
ஒரு கோரிக்கை இருந்து வருகின்றது.மிகவும் பின்தங்கிய , கஷ்டமான பொத்துவில் பிரதேசத்தினை அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து பிரித்து பொத்துவிலிலும், உஹண பிரதேசத்தினை அம்பாறை கல்வி வலயத்தில் இருந்து பிரித்து உஹணையிலும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் திறைசேரி மற்றும் கல்வி அமைச்சோடு கலந்துரையாடியதை அடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் கிழக்கு மாகாணத்திலே புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

தற்போது கிழக்கு மாகாணத்திலே 17 கல்வி வலயங்கள் காணப்படுகின்றன.

இவை ஆளுநரின் அங்கீகாரத்தோடு 19 ஆக மாற்றப்பட இருக்கின்றது. இதன் மூலம் கல்வியில் பின் தங்கிய பிரதேசங்களில் மாற்றத்தினை கொண்டு வர முடியும். மேலும் இவ் வலயங்கள் கல்வி வளர்ச்சியிலும் ஏனைய பௌதீக வளங்களை கட்டி எழுப்புவதிலும் பிரதிநிதியாக இருக்கும்.

உஹண கல்வி வலயமானது எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி காலை 9 மணிக்கும்,பொத்துவில் கல்வி வலயமானது மே மாதம் 03ம் திகதி காலை 9 மணிக்கும் ஆளுநர் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட இருக்கின்றது.

இக்கல்வி வலயங்களுக்கான ஆளனி உத்தியோகத்தர்கள் ஆகியவற்றை உடனடியாக நியமிப்பதற்கும் மற்றும் அதற்கான கட்டடவேலைகள், தளபாடங்களை செய்யுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் முத்து பண்டா,மேலதிக செயலாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.