படுவான்கரைப் பெண்களும் சாதனையாளர்களே!

படுவான் பாலகன் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படுவான்கரைப்பிரதேசத்து பெண்கள் சாதித்தவை ஏராளம் ஆனால் அவை பலருக்கு தெரிவதில்லை. என்ற ஆதங்கத்தினை கமலாம்பிக்கை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.
கமலாம்பிக்கையும், ஞானேஸ்வரியும் அம்பிளாந்துறைப் பாதைக்காக காத்திருந்தனர். பாதை வருவதற்கு நேரம்சென்றமையினால். அவ்விடத்தில் இருந்து கொண்டு இருவரும் பேச ஆரம்பித்தனர்.

நமது படுவான்கரைப் பெண்கள் சாதித்த சாதனைகள் தற்போதுள்ள சமுகத்திற்கோ, வெளிச்சமுகத்திற்கோ தெரியவில்லை. ஒருசிலருக்கு மாத்திரம் தெரியக்கூடும். சாதனைப்பெண்கள் என்றால் மட்டக்களப்பில் படுவான்கரைப்பெண்கள்தான், இவர்கள் சாதிக்காத துறைகள் இல்லை என்றுகூறுமளவிற்கு எல்லாத்துறைகளிலும் வியாபித்திருந்தனர். பலரை வாழ வைப்பதற்காக உயிரையே தியாகம் செய்தவர்கள் படுவான்கரை பெண்கள். இந்த உணர்வு எத்தனைபேருக்கு ஏற்படும், இதற்கு ஈடுஇணையான வேறு பொதுநலசிந்தனை இருக்கவே முடியாது. பலரும் சுயநலத்துடன் இருக்கையிலே படுவான்கரைப் பெண்கள் பொதுநலத்துடன் செயற்பட்டனர். இதனால், இவர்களின் வெயிலில் பலர் குளிர்காய்ந்து கொண்டு இன்று தம்மை சாதனையாளர்களாக காட்டிக்கொண்டிருக்கின்றனர். கல்வியில் உயர்ந்தவர்களாக பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்.

பலரை வாழ வைப்பதற்காக அன்புடன் அரணவணைத்து வயிறாற உணவளித்த படுவான்கரைப்பெண்களின் சாதனைகளை பெரும்பாலும் பேசுவது மிகக்குறைவு. சாதனையென்பது கல்வியில் உயர்பதவி வகிப்பதுதான் என பார்க்கின்ற சிந்தனையாளர்களும் பலர் உளர். அதனால்தான் படுவான்கரைப் பெண்களின் சாதனைகள் வெளிப்படுத்தப்படவில்லை. என்கின்றாள் கமலாம்பிக்கை.
பெண்கள் என்றாலே காலையில் நேரத்திற்கு எழும்புவள், இரவில் நேரம்சென்று தூக்குபவள். இவளுக்கு காலை தொடக்கம் இரவு தூங்கும் வரைக்கும் தொடர்ச்சியான வேலைகளே. அதனால் இவளின் வேலைகளை பெரிதாக தூக்கிப்பார்ப்பதில்லை. அம்மா வீட்டில் என்ன செய்கின்றாள் என்று கேட்டாள் சும்மாதான் இருக்கின்றாள் என்ற விடைதான் பலரிடத்தில் வெளிவரும். அம்மா செய்யும் வேலைகளை அட்டவணைப்படுத்தினால் இத்தனை வேலைகளை ஒருபெண் செய்கின்றாளா? என்ற சந்தேகமும் ஏற்படும். ஆமை ஆயிரம் முட்டைகளை இட்டுவிட்டு பேசாமலே இருந்துவிடும். கோழி ஒரு முட்டையை இட்டுவிட்டு கொக்கரித்தே திரியும். அதேபோலதான் பெண்களும் பல வேலைகளை வீட்டிலே செய்துவிட்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர். இங்கு ஆண்களை மட்டுமே வேலை செய்பவர்களாக காட்டிக்கொள்கின்றனர். இதனை கமலாம்பிக்கை ஏன் சொல்ல வருகின்றாள் என பலருக்கு தோன்றும். அவள் கூற விளைந்தது. படுவான்கரைப் பெண்களின் சாதனைகளும் அளப்பெரியதுதான் அவை வெளிப்படுத்தப்படவில்லை என்பதே கவலைக்குரியது.

வைத்தியசாலைகள் யுத்ததின் பின்னர்தான் படுவான்கரைப்பிரதேசத்தில் வளர்ச்சி பெற்று வருகின்றன. அதேவேளை பிள்ளைகளின் பிறப்புவீதங்களும் குறைவாகவே உள்ளன. பிள்ளைப்பிறப்பின் போது சிரமங்களை எதிர்கொள்ளவும் நேரிடுகின்றன. இச்சிரமம், அச்சம் இன்று பிறப்பு வீதத்தினை குறைத்திருக்கின்றது. யுத்தத்திற்கு முன்னரான காலங்களை அவதானிக்கின்ற போது, பிள்ளைப்பிறப்புக்கள் அதிகமாகவே இருந்தன. ஒருவீட்டில் குறைந்தது நான்கு பிள்ளைகளாவது இருந்தனர். இன்று ஓரிரண்டுடன் நிறுத்திக்கொள்கின்றனர். இங்கு ஏன் கமலாம்பிக்கை பிறப்பு வீதத்தினைப்பற்றி சொல்ல வருகின்றாள் என்றாள், பிள்ளையை பெற்றெடுப்பதென்பது இலகுவானதல்ல. அதன் வலியும், வேதனையும் அவற்றினை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தாய்க்கும் தான் தெரியும். அதேநேரம் அவர்களை வளர்த்தெடுப்பதென்பதும் சுலபமான விடயமல்ல அனுபவித்தால்தான் அதைப்பற்றி புரிந்துகொள்ள முடியும். இவ்வலிகளையும், வேதனைகளையும் தாங்கி பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்கள் என்றால் அதுமிகவும் சாதனைதான். இச்சாதனைகளை படுவான்கரைமக்கள் சாதாரணமாகவே புரிந்தனர். இன்று எத்தனையோ நவீன உபகரணங்களைப் பயன்படுத்தியே பிரசவத்தினை மேற்கொள்வதுடன், வயிற்றில் உள்ள பிள்ளை என்ன பிள்ளையென்பதையும் அறிந்து கொள்கின்றனர். ஆனால் தாயின் வயிற்றையும், அவளின் நடத்தையையும் வைத்துக்கொண்டே வயிற்றில் உள்ள பிள்ளை ஆணா? பெண்ணா? என்பதை கிராமத்திலே வாழ்;ந்த மருவிச்சு கூறினாள், அத்தனைப்பிரசவங்களையும் ஒற்றையாய் நின்று செய்துகாட்டினாள் மருத்துவிச்சு. படுவான்கரைப்பிரதேசமே மருவிச்சியாய் இருந்த காலம் கடந்துபோயிற்று. இன்று இப்பெண்களின் சாதனைகளும் மறைக்கப்பட்டதாகிவிட்டன.

கணவனுக்கு துணையாய் நின்று விவசாயத்தினையும், செங்கல்உற்பத்தி போன்ற தொழில்களையும் செய்துகாட்டினாள், கடந்தகாலங்களில் ஏற்பட்ட அழிவுகளினால் தம் கணவனையும் இழந்து தம்பிள்ளைகளை வளர்த்தெடுத்தாள். சமுக அமைப்புக்களிலும், சமுதாய செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்கள். இவ்வாறு பலவற்றிலும் சாதித்து, வேதனைகளையே சாதனைகளாக கொண்டுவாழும் படுவான்கரை பெண்களின் சாதனைகள் மறைக்கப்பட்டதாவிடக்கூடாதென்பதே கமலாம்பிக்கையின் விருப்பு. இவ்வாறு பேசிக்கொண்டிருக்கின்கையிலே உடைந்த தட்டியைக்கொண்ட படகு கரையை அடைந்தது. இருவரும் அவ்விடத்தில் இருந்து அகன்றனர்.