மணல் அகழ்வைத் தடுத்து மண் வளத்தைக் காப்பாற்றக் கோரி போராட்டம்


கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மணல் அகழ்வைத் தடுத்து மண் வளத்தைக் காப்பாற்றக் கோரி பொதுமக்களினால் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை, பூலாக்காடு, கோராவெளி, வாகனேரி, முறுத்தானை உட்பட்ட பல பகுதிகளில் மண் அகழ்வில் ஈடுபடுபவதால் வயல் நிலங்கள், வீதிகள், ஆறுகள், பாலங்கள் என்பன அழிவடைந்து காணப்படுதை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

பூலாக்காடு, கோராவெளி, முறுத்தானை கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பேரணி பொண்டுகள்சேனை பூலாக்காடு வீதியில் ஆரம்பித்து கிரான் பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

இப்பேரணியில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குணசேகரம் உட்பட விவசாயிகள், பிரதேச பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு மண் அகழ்வைத் தடை செய், காடழிப்பை தடை செய், எங்கள் மண்ணை காப்பாற்று, மண் அகழ்பவர்களுக்கு பொலிஸார் துணை போகாதே, எங்கள் மண்ணை கொழும்புக்கு ஏற்றாதே என பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

அத்தோடு மணல் ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரங்களின் அதிவேகச் செயற்பாடுகளினால் வீதிகள் சேதமடைவதுடன், பலர் சுவாச நோயினால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இவ்வழிகளால் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள் பல கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே மண் அபகரிப்பை உடனடியாக தடை செய்ய உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிரதேச செயலக முன்பாக சென்ற பொதுமக்கள் கிரான் பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜரினை பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுவிடம் கையளித்தனர். இம்மகஜரினை அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதாக கிரான் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அத்தோடு மண் அபகரிப்பினால் வீதிகள், பாலங்கள், விவசாய நிலங்கள் பாதிப்படைகின்றது என இதற்கு பொறுப்பான திணைக்களங்கள் எமக்கு அறிக்கை வழங்கினால் மண் அபகரிப்பினை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.