எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் 25 வீதம் பெண்களுக்கு வழங்குவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

(க.கிஷாந்தன்)

நல்லாட்சி அரசாங்கத்தில் பெண்களுக்கு பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிவடைந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதமான பங்களிப்பை பெண்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். அதே போல எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் 25 வீதம் பெண்களுக்கு வழங்குவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வுகள் 20.03.2019 அன்று  இரம்பொடை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் இராதாகிருஸ்ணன்,

இந்த அரசாங்கம் பெண்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றதை நான் பாராட்டுகின்றேன்.குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தொடர்பாகவும் வெளிநாடுகளில் வேலை செய்கின்ற பெண்கள் தொடர்பாகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் முக்கியமான அமைச்சுகளில் ஒன்றுதான் நீதி அமைச்சு அந்த அமைச்சிற்கு கூட ஒரு பெண் நியமிக்கப்பட்டிருக்கின்றமையானது எவ்வளவு தூரம் பெண்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கி இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த அரசாங்கம் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு காணாமல் ஆக்கபட்டிருக்கின்ற பெற்றோர்கள் விசேடமாக தாய்மார்களுக்கு ஒரு உரிய பதிலை மிகவிரைவில் பெற்றுக் கொடுத்து அந்த பிரச்சினைக்கு ஒரு தீர்;வை காண வேண்டும்.அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாங்கள் தயாராக  இருக்கின்றோம்.

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டுமாக இருந்தால் எங்களுடைய நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெண்களுக்கென ஒரு தனி நீதிமன்றத்தை ஏற்படுத்தி அதனை செயற்படுத்து முடியுமாக இருந்தால் நிச்சயமாக பெண்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.