பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்)

பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கலப்பிட்டிய சந்தியிலிருந்து ஹரங்கல சந்தி வரையுள்ள சுமார் 9 கிலோ மீற்றர் பிரதான வீதியை சீரமைத்து தருமாரு கோரி 18.03.2019 அன்று காலை வீரசேகரபுர பகுதியில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியை மறித்து அப்பகுதியை சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் கலப்பிட்டிய வீரசேகரபுர பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

பிரதான வீதியில் டயர்களை எரித்து, கோஷங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்தியவண்ணம் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மதகுருமார்களும் கலந்து கொண்டனர்.

கலப்பிட்டிய சந்தியிலிருந்து ஹரங்கல சந்தி வரையுள்ள சுமார் 9 கிலோ மீற்றர் பிரதான வீதியை காபட் இட்டு செப்பணிட்டு தருமாறு பல முறை அரசியல்வாதிகளிடமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இதுவரை எவ்வித தீர்வு கொடுக்கவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,

தற்போது இந்த வீதியூடாக போக்குவரத்தை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இந்த வீதியின் புனரமைப்பு பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறு வீதி அதிகார சபையின் அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்