காரைதீவில் சட்டவிரோதசெயற்பாடுகளின் கூடாரமாகவிருந்த பஸ்தரிப்புநிலையம்

சட்டவிரோதசெயற்பாடுகளின் கூடாரமாகவிருந்த பஸ்தரிப்புநிலையம் அதிரடியாக மீட்டெடுப்பு!
 (காரைதீவு  நிருபர் சகா)
 
கடந்த பலவருடங்களாக சட்டவிரோத செயற்பாடுகளின் கூடாரமாகவிருந்த பஸ்தரிப்புநிலையமொன்று தவிசாளரின் அதிரடி முயற்சியினால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
 
 இச்சம்பவம் காரைதீவில்  இடம்பெற்றுள்ளது.

 
 அங்கு திடிரென விஜயம்செய்த காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் குறித்த கட்டடத்தில் நிலைகொண்டிருந்தவர்களை உடனடியாக வெளியேறுமாறு பணித்ததோடு அங்கிருந்த குடிபானவெற்றுப்போத்தல்களை அகற்றியுள்ளார். இனிமேல் இவ்விடத்தில் மண் கல் ரிப்பர்கள் நிறுத்தக்கூடாதெனவும் மக்கள் தரித்துநிற்கவே இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது என உரத்தகுரலில் கூறி இதனை மீட்டெடுத்தார்.
 
சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
 
காரைதீவு பிரதானவீதியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்னால் பலவருடங்களுக்கு முன் நிருமாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் இதுவரை காலமும் வேறு நோக்கங்களுக்காவே பயன்படுத்தப்பட்டுவந்தது.
 
பொதுமக்கள் பயணிகள் அங்கு தரித்தநிற்கமுடியாத நிலையில் அந்த பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் செங்கல்ரிப்பர்கள் மண்ரிப்பர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இரவிலும் பகலிலும் அதற்குள்ளிருந்து பியர் குடிப்பதும் வேறு போதைவஸ்து பாவிப்பதும் வழக்கமாகியிருந்தது.
 
மக்கள் பயணிகள் அதனைப்பயன்படுத்தமுடியாமல் மழையிலும் வெயிலிலும் வெளியேநின்று இதுவரைகாலமும் காலத்தைக்கடத்தினர்.
 
மக்களுக்கென நிருமாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையத்தை மீட்டெடுக்குமுகமாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சம்மாந்துறைப்பொலிசாருக்கு 3முறை கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல காரைதீவு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்திலும் பிரஸ்தாபித்திருந்தார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
 
 
இந்நிலையில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கையினால் மீண்டும் மக்கள் பாவனைக்காக இத்தரிப்பிடம் மீட்கப்பட்டுள்ளது.
 
இன்று அதில் மக்கள் சுதந்திரமாக தரித்துநின்று பஸ்ஸில் பயணிப்பதைக்காணக்கூடியதாயுள்ளது.