கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகள் சம்பந்தமான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

(க.விஜயரெத்தினம்)
ஐக்கிய நாடுகள் புலம்பெயர்தல்   நிறுவனத்தின் கீழ்  சர்வதேச புலம்பெயர்தல்  அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகள் சம்பந்தமான செயலமர்வு இடம்பெற்றது.

2018  ஆம் ஆண்டின் 38  ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான  எதிரீடுகள்  சமபந்தமான சட்டத்தின் அடிப்படையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும், இந்த சட்டம் சம்பந்தமான கிராமமட்ட உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு  செயலமர்வு ஒன்று இன்று(14)வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.

மக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் சம்மந்தமாக அவர்களுக்கு எவ்வாறான இழப்பீடுகளை வழங்கலாம் என்பதே இச்சட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.

யுத்தகாலத்திற்கு பிற்பாடு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கு  ஈடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட  கடன் உதவிகள் , தொழில்நுட்ப ஆதரவு ,அரசாங்கத்தினால்  மேற்கொள்ளப்படும் இழப்பீட்டு நடவடிக்கைகள்,இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்,முரண்பாடுகளை தீர்த்தல்,சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகள் பிரச்சனைகளை தீர்த்தல்,பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகளை பெறுவதற்கு வழிகாட்டல்,பாதிக்கப்பட்ட மக்களின் உடல் உளரீதியாக ஆற்றுப்படுத்தலை மேற்கொள்ளல்,அவர்களை மனரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி சாதாரண நிலைக்கு எவ்வாறு இணைத்தல்,நிலைமாற்று நீதிக்கான திட்டங்களை இனங்கண்டு முறையாக அமுல்படுத்தல், பற்றிய தெளிவூட்டல்களும் இங்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன்,சமூக இணைப்பு மற்றும் நல்லிணக்க பிரிவின்  தேசிய செயற்திட்ட அதிகாரி புஷ்பி வீரகோன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தேசிய செயற்திட்ட அதிகாரி நேசான் குணசேகர ,உதவி பிரதேச செயலாளர்கள் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , அரச சார்பற்ற  நிறுவனங்களின் பிரதிநிதிகள்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.