இன்று காரைதீவு பிரதேசசபையின் விசேட அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானம்.

இடைநிறுத்தப்பட்ட ஆறு ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கமர்த்த அனைத்துஉறுப்பினர்களும் ஏகோபித்த ஆதரவு! 
இன்று காரைதீவு பிரதேசசபையின் விசேட அமர்வில் தீர்மானம்.
(காரைதீவு  நிருபர் சகா)
 
இடைநிறுத்தப்பட்ட ஆறு பதிலீட்டு அடிப்படையிலான ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அமர்த்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவளித்தார்கள்.

 
இச்சம்பவம்   இன்று  (14) வியாழக்கிழமை நடைபெற்ற காரைதீவு பிரதேசசபையின் விசேட அமர்வில் இடம்பெற்றது.
 
கடந்த வெள்ளிக்கிழமை(8) நடைபெற்ற சபையின் 12வது மாதாந்த அமர்வில் 3வருடங்களாக பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றும் ஆறு ஊழியர்களின் சேவையை மேலும் ஆறு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை 5உறுப்பினர்கள் எதிர்த்தகாரணத்தினால் அவர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தார்கள் என்பது தெரிந்ததே.
 
அன்றையதினமே எம்.காண்டீபன் எ.ஜலீல் சி.ஜெயராணி எ.ஆர்.எம்.பஸ்மீர் த.மோகன் ஆகிய  5உறுப்பினர்கள் இவர்களுக்கு மீளத்தொழில் வழங்கவேண்டும்.எனவே விசேடகூட்டத்தைக்கூட்டுங்கள் எனக்கோரி தவிசாளரிடம் எழுத்துமூலம் கடிதம் சமர்ப்பித்திருந்தார்கள்.
 
அதற்கமைய காரைதீவு பிரதேசசபையின் விசேட அமர்வு இன்று (14) வியாழக்கிழமை சபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நடைபெற்றபோது மேற்படிதீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
நேற்று உபதவிசாளர் தவிர்ந்த ஏனைய தவிசாளர் உள்ளிட்ட 11உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாயிருந்தனர்.
இடைநிறுத்தப்பட்ட 6ஊழியர்களையும் மீள பணிக்கமர்த்துவது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் பெற்றப்பட்டன.
 
முடிவில் வாக்களிப்பிற்கு விடப்பட்டபோது அனைவரும் குறித்த ஊழியர்களை மீளவும் சேவைக்கமர்த்தவேண்டுமென ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்கள். ஏகமனதாக அது நிறைவேற்றப்பட்டது.
 
வழமைக்குமாறாக சபை அமர்வைக்காண மனிதஅபிவிருத்தித்தாபனத்தின் வேள்வி அமைப்பின் உபதலைவி றிலீபாபேகம் பிரதிநதி இ.தர்சிகா மற்றும் குறித்த ஊழியர்களும் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
கடந்த அமர்வில் இப்பிரேரணையை முதன்முதலில் எதிர்த்த சுயேச்சைக்குழு உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் இந்த அமர்வில் கூறுகையில்: அன்றிருந்த மனநிலை அதனை எதிர்க்கவைத்தது. பின்னர்தான் உணர்ந்தேன் அது தவறு என்று. அப்படி எதிர்த்திருக்கக்கூடாது.. அது தவறு. வேதனையடைந்தேன். அவர்களை பழிவாங்கவேண்டுமென்று நான் அப்படி எதிர்க்கவில் என்றார்.
 
மு.கா. உறுப்பினர் எம்.தனீஸ்கூறுகையில்;:  இந்த ஊழியர்களால்தான் இந்தப்பிரதேசசபை இயங்குகின்றது. அவர்கள்தான் எம் சொத்து. அவர்கள் இல்லாத தாற்பரியத்தை கடந்த 4தினங்களில் அனைவரும் உணர்ந்திருந்தோம். ஊழியர்கள்தான் சபை என்றார்.
 
த.தே.கூ.பெண் உறுப்பினர் சி.ஜெயராணி கூறுகையில்;ஆறு ஊழியர்களை நிறுத்த ஆதரவளித்தோர் உண்மையில் ஊழியர்களின் வயிற்றிலடிக்கவந்த பிரதிநிதிகளே தவிர மக்கள் சேவையாற்றவந்தவர்கள் அல்ல என்பது எனது கருத்து. நீங்கள் குறுகிய அரசியல் செய்கிறீர்களே தவிர மக்கள் சேவையல்ல. என்றார்.
 
சுயேச்சை உறுப்பினர் எ.பஸ்மீர் கூறுகையில்: மக்களால் வந்தவர்கள் நாம். மக்கள் சேவையாற்றவேண்டுமே தவிர மீடியாவில் புகழ் தேடவல்ல. எதற்கெடுத்தாலும் மீடியா பின்னால் போகிறீர்கள். ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்கள் வயிற்றிலடிக்கவேண்டாம். என்றார்.
 
அ.இ.மு.கா உறுப்பினர் எ.ஜலீல் த.தே.கூ.உறுப்பினர்களான த.மோகனதாஸ் ச.நேசராசா மு.கா.உறுப்பினர் எம்.இஸ்மாயில் சு.க.உறுப்பினர் எம்.காண்டீபன் சுயேச்சை உறுப்பினர் த.மோகன் ஆகியோரும் ஊழியர்களுக்கு ஆதரவாகவே உரையாற்றினார்கள்.
 
இறுதியில் தவிசாளர் கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்;:
 
 நாம் இப்பிரதேசத்தில் 112பேர் போட்டியிட்டு 12பேர் கௌரவ உறுப்பினர்களாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். கௌரவமாக நடந்துகொள்ளவேண்டும்.அவர்கள் வயிற்றிலடிக்கக்கூடாது. என்மீது கோபம் என்றால் என்னிடம் நேரடியாக காட்டுங்கள்.
 
ஊழியர்கள் தவறுசெய்தால் என்னிடம் முறையிடுங்கள். மாறாக அவர்களைவீட்டிற்கு அழைக்கிறீர்கள். அவர்களுக்கும் சுயமரியாதையுண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. உறுப்பினர் றனீசின் உரையிலிருந்து நல்லபாடத்தைக்கற்றுக்கொள்ளுங்கள்.
 
அதைவிடுத்து ஊடகநாடகம் ஆடுகின்றீர்கள். உண்மையும் நேர்மையும் சத்தியமும் என்றும் நிலைக்கும். அதுதான் என்றும் வெல்லும். தந்திரமும் சூழ்சச்சியும் ஒருபோதும் வெல்லாது. 
இந்த அமர்வு மூலம் கற்றறிந்த பாடங்களை பெற்றிருக்கிறீர்கள். மறப்போம் மன்னிப்போம்.
 
 கடந்தவைகடந்தவையாக இருக்கட்டும். இன்று அனைவரும் இணைந்து அந்த ஊழியர்களுக்காக ஆதரவளித்தீர்கள். அதுபோல தொடர்ந்தியங்கவேண்டும். இனியாவது குறுகிய அரசியல் செய்யாது மக்கள் சேவையாற்றமுன்வாருங்கள். என்றார்.