மட்டக்களப்பு மக்கள் கோபமாக பேசும்போது கூட அன்பாகத்தான் தெரிகிறது .நடிகர் விவேக்

மட்டக்களப்பு மக்கள் கோபமாகப் பேசும் போது கூட அது அன்பாகத் தான் தெரிகின்றது. மட்டக்களப்பு மக்கள் என்றென்றும் அன்பான மக்கள். எல்லோரையும் நேசியுங்கள் என நேற்று மட்டக்களப்பு நகரில் நடந்தநிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நடிகர் விவேக் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

எத்தனையோ கண்ணீரையும், துன்பத்தையும், துயரத்தையும் தாண்டி வந்த உண்மையான வீரர்கள். பல நாடுகளில் துயரம் என்றால் என்னவென்று தெரியாமல் அன்பை மட்டுமே, கொண்டாட்டத்தை மட்டுமே, வாழ்வில் சந்தோசத்தை மட்டுமே பார்த்த குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் மிக மிக அதிகமான வளத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்து பின்னர் மிக மோசமான துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு பின்னர் அதிலிருந்து மீண்டு நெருப்பில் இருந்து எழுந்து வருகின்ற பீனிக்ஸ் பறவை போன்று எழுந்து வருகின்ற நீங்கள் தான் உண்மையான வீரர்கள்.

அடுத்த ஒரு சாகாப்தத்தை உருவாக்குகின்ற உழைப்பாளிகள் நீங்கள். இன்னும் பத்து வருடங்களில் மற்றைய நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு நீங்கள் வளர்ந்து நிற்பீர்கள்.

இன்று சிசிடிவி இல்லாத இடமே இல்லை. ஆனால் உலகத்திற்கே ஒரு சிசிடிவி இருக்கின்றது. அது நம்மை நெருக்கமாகப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றது. அது வேறு யாரும் அல்ல இறைவன் தான். அதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

பிள்ளைகளை வளர்க்கும் போது குடும்ப உறவுகளுக்கு இடையிலான அன்பு, அரவணைப்பினை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். தாய்மார்கள் தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டு, தந்தையர்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கொண்டு, பிள்ளைகள் வீடியோ விளையாட்டுக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் குடும்பத்துக்குள் இணக்கம் இல்லாமல் போய்விடும். அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருக்கின்ற கேமராக்கள் மூலமாகவும், கையடக்கத் தொலைபேசியில் எளிதாகக் கிடைக்கின்ற இணையத்தின் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன.

பெற்றோர்கள் வேலை பார்ப்பதன் நோக்கம் குடும்பத்தினை வளமாக்க வேண்டும் என்பதற்காகவே தான். குடும்பத்தில் உள்ள குழந்தைகள் வேறு வேறு திசைக்குச் சென்று விட்டால் பெற்றோர்கள் கஷ்டப் படுவதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். அதனால் தான் ஒரு நல்ல ஒழுக்கத்தை சமுதாயத்திற்குக் கற்பிக்கும் இடங்களிலே குழந்தைகளை விடுங்கள் என்று தெரிவித்தார்.

நன்றி மட்டு செய்திகள்