கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக செல்வம்!

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 119 வாக்குகள் ஆதரவாகவும், 76 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தன.

இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

நேற்றைய வாக்களிப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார். வாக்கெடுப்பிற்கு முன்னதாக நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.

எனினும், வாக்களிப்பு சமயத்தில் சபா மண்டபத்திற்கு வராமல், தனது அறையிலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாமல், வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென, ரெலோவின் அரசியல் உயர்பீடத்தில் நேற்று முன்தினம் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

எனினும், ரெலோவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான கோடீஸ்வரன் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, ஆதரவாக வாக்களித்தார்.

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற ஈ.சரவணபவனும் இன்றைய வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர் இன்றைய வாக்கெடுப்பு தினத்தினை மறந்து யாழில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.