சுத்தமான தமிழ் உலகெங்கும் வாழ காரணம் மட்டக்களப்பு மக்களே ! – பெருமை கூறிய நடிகர் விவேக்

சுத்தமான தமிழ் உலகமெங்கும் வாழ்வதற்கு காரணம் இந்த மட்டக்களப்பு மண்ணில் இருந்துசென்றவர்களெ காரணம் என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்தார்.

அனைத்து வளங்களையும் கொண்டு ஆசிர்வதிக்கப்பட்ட பூமியாக இலங்கை காணப்படுவதாகவும் நடிகர் விவேக் இங்கு தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஒற்றுமை மட்டும் ஏற்பட்டால் இந்த நாட்டினை எந்த நாட்டினாலும் வெல்லமுடியாத நிலையுருவாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் இன்று 11ம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் சின்ன கலைவாணர் எனப்படும் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கலந்து சிறப்பித்தார்.

மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்புரையாற்றும் வகையில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானம் நிரம்பிய சனக்கூட்டத்துடன் இதன்போது விவேகானந்தர் n தாடர்பில் நடிகர் விவேக் சிறப்புரையாற்றினார்.

இதன்போது விவேகானந்தரின் நூல் தொகுதியொன்றும் நடிகருக்கு சுவாமிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

இலங்கையில் தூய்மையான தமிழ் பேசுவோர் வாழ்வதாகவும் அதிலும் மட்டக்களப்பு தமிழர்களின் தமிழே தூய்மையான தமிழாகவும் செந்தமிழாகவும் தான் நோக்குவதாகவும் விவேக் இதன்போது குறிப்பிட்டார்.