மண்முனை வடக்கில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வு

க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “திறமையான பெண்ணொன்று அழகான உலகினைப் படைக்கின்றாள்”தொனிப்பொருளில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை(8)காலை முதல் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

உலகளவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பெண்கள் தினப் பேரணி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண்கள் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கங்கள், சமுர்த்தி மாதர் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நடாத்தப்பட்டது.

பிரதேச செயலக முன்றலில் இருந்து பெண்கள் தினப் பேரணி ஆரம்பமாகி காந்திப்பூங்கா, மணிக்கூட்டுக்கோபுரச் சந்தி ஊடாக அரசடிச் சந்தியை அடைந்து புகையிரத நிலையச் சந்தி ஊடாக மீண்டும் பிரதேச செயலகத்தினை வந்தடைந்தது.

இக்கண்டனப் பேரணியில் சுமார் 3000 பெண்கள் கலந்துகொண்டார்கள்.”மதுபாவனை ஒழிப்போம்”,”பெண்கள் நாட்டின் கண்கள்”,”பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்போம்”,”பெண்களுக்கு சம உரிமை வழைங்கு”,”குடும்ப வன்முறையை தூண்டும் போதைப்பொருள் பாவனையை தடுப்போம்”,”பெண்களைப் போற்றுவோம்”,”பெண்களுக்கு ஊதியத்தை வழங்கு” என்று சுலோக அட்டையை தாங்கியவாறு மகளிர்தினம் கவனயீர்ப்பு ஊர்வலம் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், அதிதிகளாக ஓய்வு பெற்ற மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, சட்டத்தரணியும் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளருமான எஸ்.மங்களேஸ்வரி, விழுது மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி திருமதி க.இந்துமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், பெண்களின் உரிமைகளை வெளிப்படுத்தும் நாடகங்கள், கலை நிகழ்வுகள், பாடல் , கவிதை, பேச்சுக்களுடன் பெண்கள் கௌரவிப்புகளும் இடம்பெற்றது.
பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னுதாரணமாக மிளிர்கின்ற உள்ளுராட்சி மன்றங்களில் பங்கு பெறும் பெண் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குள் உள்ள பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக் கடன்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.