படுவான்கரையும் விவசாய செய்கையும்

– படுவான் பாலகன் –
அடுத்த போகமும் ஆரம்பிக்க போகின்றது. ஆரம்பக்கூட்டங்களும் நடைபெறவிருக்கின்றன. என்னதான்கூடியும் சரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதில்லையே என திருத்தணிகாசலம் பேரின்பத்திடம் புறுபுறுத்துக்கொண்டிருந்தான்.
படுவான்கரைப்பிரதேசத்தில் தாமரைப்பூச்சந்தியென்றால் எல்லோரும் இலகுவாக இனங்காட்டிவிடுவர். நான்கு பக்க வீதியின் நடுவே தாமரைப்பூ ஒன்று அமைக்கப்பட்டு அதிலே பலரின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த சில காலம் தாமரைப்பூவே இல்லாமல் போய், இப்போதுதான் புதிய தாமரைப்பூ அமைக்கப்பட்டிருக்கின்றது. அதன் அருகில் நின்று, வில்லுக்குளத்தினைப்பார்த்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பிரதேசம் என்பது, அதிகளவு நெற்செய்கை காணியினை கொண்டமைந்த பகுதியேயாகும். இங்குள்ள மக்களும் விவசாயத்தினையும், கூலித்தொழிலையும் செய்தே தமது வாழ்க்கையினை வழிநடத்திச் செல்கின்றனர். இதனால் இம்மக்களிடம் வறுமைகள் சூழ்கின்றபோதும் வேளாண்மை செய்கையை கைவிடுவதில்லை. அதிகளவானவர்கள் கடன்பெற்றே நெற்செய்கையையும் செய்துகொண்டிருக்கின்றனர். இதனால் இலாபத்தினை பெறுவதைவிட நட்டத்தினையே அதிகம் பெற்றுக்கொள்கின்றனர். ஆனாலும் சோற்றுக்காவது நெல்கிடைக்கின்றது என்ற சந்தோசத்தில் விவசாயத்தினை செய்துகொண்டு வாழ்கின்றனர். விவசாயத்தில் இன்றுவரை பெரிதளவில் இலாபத்தினைப் பெற்றுக்கொள்ளாமைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன எனக்கூறிய திருத்தணிகாசலம். நெல் அறுவடை, விற்பனை தொடர்பிலும் அதிகம் பேசத்தொடங்கினான்.
நெல் அறுவடை என்பது, இற்றைக்கு ஒரு தசாப்தங்களுக்கு முன்பு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. மனிதர்களின் வலு அதிகம் பயன்படுத்தப்பட்ட காலமாகவிருந்தது. நெல் அறுவடையை மனிதர்களே அறுவடை செய்தனர். இதனால் பல நாட்கள் அறுவடை நிறைவுக்கு எடுத்தது. அறுவடை செய்வது, உப்பட்டிகட்டுவது, சூடுவைப்பது, சூடுமிதிப்பதென தொடர்ச்சியாக நடைபெற்ற பின்பே நெல்லினை வீட்டுக்கு கொண்டுசென்றனர். இதன்பயனாக அந்நெல்லுக்கு நல்மரியாதை கிடைத்தது. ஆனால் தற்கால விவசாயமுறை இயந்திரங்களோடு இணைந்திருக்கின்றமையினால் நெல்லுக்கான மதிப்பென்பது குறைவாக காணப்படுகின்றது. ஓரிரு தசாப்தங்களுக்கு முன்பு அறுவடையை பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாக மனிதவலுக்களின் உதவியுடன் ஒன்றுக்குமேற்பட்ட நாட்கள்  தேவைப்பட்ட அதேவேளை இன்று ஒருநாளில் சில மணித்தியாலங்களில் இயந்திரம் மூலமாக உடனடியாக நெல் கையிலே கிடைத்துவிடுகின்றது. அதனால் என்னமோ அதற்கான மரியாதையும் குறைவாகவுள்ளது. அறுவடை செய்யத்தொடங்கி அறுவடை நெல்லைவீட்டுக்கு கொண்டுசெல்லும் வரை நெல்வயலிலே விவசாயிகளுக்கு வேலையிருந்தது. அதேநேரம் பெரும்பான்மையாக எல்லோரது நெற்பயிரும் ஒரே காலத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடைகளும் ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் இடம்பெறும், விவசாயச் செய்கையை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளும் பகல், இரவாக நடைபெறும். அறுவடைத்திகதிகளுக்கு ஏற்ப அறுவடைகளும் நடைபெறும். தற்காலம், அறுவடைக்கான திகதி, ஆரம்பத்திகதி போன்றன தீர்மானிக்கப்பட்டாலும் அத்திகதிகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றதா? என்பதையே கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. ஒருவரின் நெற்பயிர் அறுவடைக்கு தயாராகிவிட்டால் உடனடியாக இயந்திரத்தினை அழைத்து அறுவடை செய்துவிட்டு, அன்றே அவ்விடத்தினை விட்டு அகலுகின்றனர். அருகில் உள்ள நெற்பயிர் அறுவடை செய்வதற்கான காலத்தினை அடைந்துவிட்டதா என்பதனை அவதானித்து அதற்கேற்றவகையில் தமது அறுவடையை தீர்மானிப்பதென்பது மிகவும் குறைவே. அதேவேளை தமது அறுவடை முடிந்ததும் அவ்விடத்தினை விட்டு அகன்றுசெல்வதும், தமது பாதுகாப்புக்களை நீக்குவதனாலும் அருகில் உள்ள விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றனர். அதேநேரம் மந்தைவளர்ப்பாளர்களும் அறுவடைசெய்ய நெல்வயலுக்குள் மந்தைகளை அனுப்பி விடுகின்றனர். இதன்காரணமாக விவசாயிகள் இன்னும் பாரிய நெருக்கடிக்குள்ளாகி, அறுவடை செய்வதற்கேற்ற நிலையினை நெற்பயிர் அடையாவிட்டாலும், பச்சையிலே நெல்லினை அறுவடைசெய்கின்றனர். இதனால் உரிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளவும், தரமான நெல்லினை உற்பத்தி செய்ய முடியாதவர்களாவும் உள்ளனர்.
நெல்லின் அறுவடை முடிந்துவுடன் ஈரப்பதனைக்கருத்தில் கொண்டு உடனடியாக விற்பனை செய்யவேண்டிய கட்டாயத்திற்குள்ளும் விவசாயிகள் உள்ளாவதோடு, ஈரப்பதனான நெல்லினை காயவைப்பதிலும் தொடர்ச்சியாக மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டும் வருகின்றனர். நெல்லினை காயவைப்பதற்கான களமின்மையின் காரணமாக கொங்கிறீட் வீதிகளையே காயவைக்கும் இடமாக மாற்றிக்கொள்கின்றனர். இதனால் உற்பத்தி செய்யப்பட்ட நெல் வீதியால் செல்லும் இயந்திரங்களின் சிற்களுக்குள் அகப்பட்டு உடைந்து அரிசியாக்கப்படுவதும், நெல்லுடன் கற்கள், ஏனைய சகதிகள் சேர்வதும் நடந்தேறுவதும், வீதியால் செல்பவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதும், விவசாயிகள் சீதேவி என தாம் நினைப்பதை எல்லோரும் மிதிக்கும் நிலையை உருவாக்குவதென்பதையும் எண்ணிகவலையுறுவதும் தற்கால விவசாய செய்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக உள்ளன. எனக்கூறிய திருத்தணிகாசலம் நாளை இதுதொடர்பில் தொடர்ந்தும் பேசுவோம் எனக்கூறிவிட்டு அவ்விடத்தினைவிட்டு அகன்றான்.